தேடுதல்

புனித அல்ஃபோன்ஸ் கல்விக்கழகத்தினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் புனித அல்ஃபோன்ஸ் கல்விக்கழகத்தினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

புதுப்பித்தலின் முக்கியத்துவத்தை உணரும் காலத்தில் நாம் உள்ளோம்

நன்மையை நோக்கியப் பாதையில் மகிழ்ச்சியுடன் நடைபோட, நன்னெறி இறையியலாளர்கள் உதவமுடியும். - திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித அல்ஃபோன்ஸ் கல்விக்கழகம் துவக்கப்பட்டதன் 70ம் ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி, அக்கல்விக்கழகத்தின் அங்கத்தினர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நன்னெறி இறையியலைக் கற்பிப்பதில் அவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டினார்.

ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பங்களிப்பைக் குறித்து இக்கல்விக்கழகம் மகிழும் அதேவேளை, இறை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இயைந்த வகையில் பதிலளிக்க, துணிச்சலான முடிவுகள் எடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை.

இன்றைய உண்மை நிலைகளுக்கு ஏற்ற வகையில் நிலைப்பாடுகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதுப்பித்தலின் முக்கியத்துவத்தை உணரும் ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதையும் நினைவூட்டினார்.

நன்மையை நோக்கியப் பாதையில் மகிழ்ச்சியுடன் நடைபோட, நன்னெறி இறையியலாளர்கள் உதவமுடியும் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

பாதுகாப்பற்ற நிலைகளாலும், ஏழ்மையாலும், வாழ்வின் ஓரத்திற்கு தள்ளப்படுவதாலும் துன்பங்களை அனுபவிக்கும் மக்களின் குரல்கள், அனைவராலும் செவிமடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரன்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற நற்செய்தி மதிப்பீடு இதற்கு உதவும் என்று கூறினார்.

பயன்படுத்தப்பட்டு, பின்னர் குப்பைபோல் மனிதர்களை வீசி எறிவது, சுயநலக் காரணங்களால் இயற்கை சுரண்டப்படுவது, வருங்காலம் குறித்த அச்சத்துடன் ஏழைகள் வாழ்வது போன்ற நிலைகளை களைந்தெறிய, நன்னெறி இறையியலாளர்கள், தங்கள் பங்கை ஆற்றவேண்டிய தேவையையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2019, 14:35