தேடுதல்

திருத்தந்தையுடன் 'மைக்ரோசாஃப்ட்' நிறுவன தலைவர் Brad Smith திருத்தந்தையுடன் 'மைக்ரோசாஃப்ட்' நிறுவன தலைவர் Brad Smith  

திருத்தந்தையைச் சந்தித்த 'மைக்ரோசாஃப்ட்' தலைவர்

'மைக்ரோசாஃப்ட்' நிறுவனமும், வாழ்வை ஆதரிக்கும் பாப்பிறைக் கல்விக் கழகமும் இணைந்து, ‘செயற்கை நுண்ணறிவுத் துறையில் நன்னெறி’ என்ற பெயரில், ஒரு பன்னாட்டு விருதை உருவாக்கியுள்ளன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'மைக்ரோசாஃப்ட்' நிறுவனத்தின் தலைவரான Brad Smith அவர்கள், பிப்ரவரி 13, இப்புதன் பிற்பகல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில், தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாடினார் என்று, திருப்பீட தகவல் தொடர்புத் துறையின் தலைவர், அலெசாந்த்ரோ ஜிசொத்தி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

வாழ்வை ஆதரிக்கும் பாப்பிறைக் கல்விக் கழகத்தின் தலைவரான பேராயர் வின்சென்சோ பாலியா அவர்களும், இச்சந்திப்பில் கலந்துகொண்டார் என்று, ஜிசொத்தி அவர்கள் கூறினார்.

Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு, சமுதாயத்தின் பொதுவான நன்மைக்கு எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்தும், டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் உலகில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்தும், இச்சந்திப்பில் பேசப்பட்டது என்று கூறப்படுகிறது.

'மைக்ரோசாஃப்ட்' நிறுவனமும், வாழ்வை ஆதரிக்கும் பாப்பிறைக் கல்விக் கழகமும் இணைந்து, ‘செயற்கை நுண்ணறிவுத் துறையில் நன்னெறி’ என்ற பெயரில், ஒரு பன்னாட்டு விருதை உருவாக்கி, 2020ம் ஆண்டு வழங்கவிருப்பதாக ஜிசோத்தி அவர்கள் கூறினார்.

பிப்ரவரி 25ம் தேதி முதல், 27ம் தேதி முடிய, வாழ்வை ஆதரிக்கும் பாப்பிறைக் கல்விக் கழகம், "ரோபோ நன்னெறி, மனிதர்கள், கருவிகள் மற்றும் நலவாழ்வு" என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கை நடத்தவிருப்பதும், 2020ம் ஆண்டு நடைபெறும் அடுத்த கருத்தரங்கு, செயற்கை நுண்ணறிவு என்ற கருத்தை மையப்படுத்தி அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2019, 15:16