பானமாவில் அருள்பணி சோசா பானமாவில் அருள்பணி சோசா 

உலகளாவிய இயேசு சபை தலைவருக்கு திருத்தந்தை கடிதம்

இயேசு சபையினரின் திட்டங்கள் - தெளிந்து தேர்தலை ஊக்குவித்தல் மற்றும், ஆன்மீகத் தியானங்கள், புறக்கணிக்கப்பட்டோருடன் இருத்தல், இளையோரின் பாதையில் உடன்நடத்தல், பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாத்தல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருஅவை முன்னுரிமை கொடுக்கும் பணிகளோடு ஒத்திணங்கும் வகையில், இயேசு சபையினர் எடுத்துள்ள அப்போஸ்தலிக்க முன்னுரிமை திட்டங்கள் குறித்து, இயேசு சபையின் உலகளாவிய தலைவர் அருள்பணி அர்த்தூரோ சோசா அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தெளிந்து தேர்தலை ஊக்குவித்தல் மற்றும், ஆன்மீகத் தியானங்கள், புறக்கணிக்கப்பட்டோருடன் நடத்தல், இளையோரின் பாதையில் உடன்நடத்தல், நம் பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் அடுத்த பத்தாண்டுகளில், இயேசு சபையினர் முக்கிய கவனம் செலுத்தவுள்ளனர்.

2019ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு முடிய, முன்னுரிமை கொடுத்து செயல்படவுள்ள இயேசு சபையினரின் திட்டங்கள் குறித்து, அருள்பணி சோசா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள், உலக ஆயர்கள் மாமன்றங்கள் மற்றும், ஆயர் பேரவைகள், குறிப்பாக, நற்செய்தியின் மகிழ்வு (Evangelii Gaudium) திருத்தூது அறிக்கை வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ள திருஅவையின் தற்போதைய அப்போஸ்தலிக்க முன்னுரிமை திட்டங்களோடு ஒத்திணங்கும் விதத்தில், இயேசு சபையினரின் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு சபையினர் தங்கள் பணிகளில் முன்னுரிமை கொடுத்துள்ள இத்திட்டங்கள், நூலக அல்லது சோதனைக்கூட வழிமுறை அல்ல, மாறாக, ஆக்கப்பூர்வமான தெளிந்து தேர்தல் முறை என்றும் பாராட்டியுள்ள திருத்தந்தை, இந்த முதல் திட்டம் அனைத்திற்கும் அடிப்படையானது, ஏனெனில், இது, ஆண்டவரோடும், தன்னோடும், குழுவோடும் செபத்திலும், தெளிந்து தேர்தலிலும் இயேசு சபையினர் உறவுடன் வாழ்வதற்கு உதவுகின்றது என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2019, 15:33