தேடுதல்

Sacrofanoவின் Fraterna Domus இல்லத்தில் நிறைவேற்றிய திருப்பலியின்போது.... Sacrofanoவின் Fraterna Domus இல்லத்தில் நிறைவேற்றிய திருப்பலியின்போது.... 

புலம் பெயர்ந்தோருக்கு திருத்தந்தையின் திருப்பலி

மற்றவர்களைச் சந்திக்கும் திறந்த மனம் பெறுவதற்கு, நாம் முதலில் அச்சத்தைக் கைவிடவேண்டியது அவசியம் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

எகிப்திலிருந்து வெளியேறி, வாக்களிக்கப்பட்ட நாடு நோக்கி சென்றுகொண்டிருந்த இஸ்ரயேல் மக்களிடம், மோசே, 'அஞ்சாதீர்கள், இறைவன் நம்மோடு இருக்கிறார்' என்று கூறிய சொற்களை மையமாக வைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 15 இவ்வெள்ளியன்று மாலை மறையுரை ஒன்றை வழங்கினார்.

உரோம் நகருக்கு வெளியே Sacrofano எனுமிடத்தில் அமைந்துள்ள Fraterna Domus என்ற இல்லத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கின் நிறைவுத் திருப்பலியை, குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்ந்தோருடன் இணைந்து, இவ்வெள்ளி மாலை நிறைவேற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கருத்தரங்கின் தலைப்பாக வழங்கப்பட்ட 'அச்சத்திலிருந்து விடுதலை பெற்று' என்ற கருத்தை, தன் மறையுரையின் மையமாக்கினார்.

வாக்களிக்கப்பட்ட நாடு நோக்கி பாலைநிலம் வழியே நடந்த இஸ்ரயேல் மக்கள், இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, தங்கள் அச்சங்களைக் களையவேண்டியிருந்தது என்று கூறியத் திருத்தந்தை, புயலால் படகு அலைக்கழிக்கப்பட்ட வேளையில், அச்சத்திலிருந்த சீடர்களைத் தேடி இயேசு கடல் மீது நடந்து சென்று, "துணிவோடிருங்கள், நான்தான்" என்று கூறியதையும், மேற்கோள் காட்டினார்.

மற்றவர்களைச் சந்திக்கும் திறந்த மனம் பெறுவதற்கு, நாம் முதலில் அச்சத்தைக் கைவிடவேண்டியது அவசியம் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2019, 16:47