தேடுதல்

இத்தாலியின் தேசிய குற்றவியல் நீதிபதிகள் கழகத்தின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தேசிய குற்றவியல் நீதிபதிகள் கழகத்தின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  

சமூகக் கட்டமைப்பை காப்பது நீதிபதிகளின் கைகளில்

நீதி என்பது ஏற்கனவே நாம் பெற்றுவிட்ட ஒன்றல்ல, மாறாக, தினமும் நாம் முயன்று கொண்டிருக்கும் ஒன்று - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தீர்ப்பு வழங்குவதில் கருணை மேலோங்கியிருக்க வேண்டும் என இத்தாலியின் தேசிய குற்றவியல் நீதிபதிகள் கழகத்தின் அங்கத்தினர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

1909ம் ஆண்டு துவக்கப்பட்ட இக்கழகம் தன் 110ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதை முன்னிட்டு, உரோம் நகரின் Sapienza பல்கலைக்கழகத்தில் இவ்வெள்ளி, சனி ஆகிய இருநாள்கள் 'நமது வரலாறு, வருங்காலத்தை நோக்கியதாக' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த பிரதிநிதிகளை, பிப்ரவரி 9 இச்சனிக்கிழமை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாட்டின் குடியரசு சட்டங்களை கண்காணிப்பதிலும், அரசியலமைப்புச் சார்ந்த மதிப்பீடுகளை ஊக்குவிப்பதிலும் தேசிய நீதிபதிகள் கழகம்  கடந்த 110 ஆண்டுகளாக ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.

பதட்டம் நிறைந்த இன்றைய உலகில், சமூகக் கட்டமைப்பும், மனிதர்களின் மனச்சான்றும் பலவீனப்படும் சூழல்களிலிருந்து காப்பற்றப்பட வேண்டியதில் நீதிபதிகளின் பெரும்பங்களிப்பை திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

நீதி என்பது ஏற்கனவே நாம் பெற்றுவிட்ட ஒன்றல்ல, மாறாக, தினமும் நாம் முயன்றுகொண்டிருக்கும் ஒன்று என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வின் துவக்கம் முதல் அதன் இயல்பான முடிவு வரை நீதியைக் காப்பாற்றுதல், குடும்பச் சட்டங்கள், குடியேற்றதாரர் குறித்த சிக்கலான உண்மை நிலைகள் போன்றவற்றை விண்ணப்பங்களாக நீதிபதிகளின் முன் வைத்தார்.

உண்மைகள் பொய்யாகத் திரிக்கப்படுதல், தவறான தகவல்கள் பரப்பப்படுதல் போன்றவை நிகழும் இன்றையக் காலக்கட்டத்தில், உண்மை நிலைகளின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டியது நீதிபதிகளின் முதல் கடமையாகிறது என்பதையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2019, 14:30