தேடுதல்

IFAD கூட்டத்தில் கலந்துகொள்ளச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் IFAD கூட்டத்தில் கலந்துகொள்ளச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் 

IFAD ஊழியருக்கு திருத்தந்தையின் தனிப்பட்ட பாராட்டு

"நான் ஆற்றும் பணி, கடலில் விழும் சிறு துளிதான், ஆனாலும், இத்துளி விழுந்ததால், அந்தக் கடலில் மாற்றங்கள் உருவாகியுள்ளன" - புனித அன்னை தெரேசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகில், மிகவும் வறுமை நிலையில் வாழும் மக்களிடையே அயராது பணியாற்றி வரும், 'வேளாண்மை முன்னேற்றத்திற்கு பன்னாட்டு நிதி' என்ற IFAD நிறுவனத்தின் அனைத்து ஊழியருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய ஒரு தனிப்பட்ட உரையில், 'உங்களுக்கு நன்றி' மற்றும் 'முன்னேறிச் செல்லுங்கள்' என்ற இரு உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.

'உங்களுக்கு நன்றி'

IFAD நிறுவனத்தில், பிப்ரவரி 14, இவ்வியாழனன்று காலை, இரு உரைகளை வழங்கியபின், அந்நிறுவனத்தில் பணிபுரிவோர் அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்த திருத்தந்தை, தனக்கு முன் கூடியிருக்கும் ஊழியருக்கும் இன்னும் உலகெங்கும் IFAD நிறுவனத்தில் பணியாற்றும் அனைவருக்கும் தன் சிறப்பான வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தார்.

இன்றைய உலகில் பல நிறுவனங்கள், வறுமை ஒழிப்பு என்ற முயற்சியைக் குறைப்பதற்கும், செல்வந்தரின் சொத்துக்களை அதிகரிப்பதற்கும், முயன்று வரும் வேளையில் IFAD நிறுவனத்தினர், மிகவும் வறுமைப்பட்டோரின் துயர் துடைக்க, கூடுதல் முயற்சிகளை மேற்கொள்வதற்காக, தான் இறைவனுக்கு நன்றி கூறுவதாக, திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

'முன்னேறிச் செல்லுங்கள்'

வறியோர் நடுவே பணியாற்றுவதற்கு, திறமை மட்டும் போதாது, மென்மையான உள்ளமும் தேவை என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு பண்புகளையும் கொண்டு செயலாற்றும் IFAD நிறுவனத்தினர், தங்கள் உள்ளங்களை மேலும், மேலும் விரிவாக்க முயற்சிகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இப்பணியில் மனம் தளராமல், நம்பிக்கை இழக்காமல் முன்னேறிச் செல்வது கடினம் என்பதால், 'முன்னேறிச் செல்லுங்கள்' என்ற அழைப்பை, தன் இரண்டாவது எண்ணமாகப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் செய்த அன்புப்பணியைக் குறித்து புனித அன்னை தெரேசா பேசுகையில், "நான் ஆற்றும் பணி, கடலில் விழும் சிறு துளிதான், ஆனாலும், இத்துளி விழுந்ததால், அந்தக் கடலில் மாற்றங்கள் உருவாகியுள்ளன" என்று சொன்னதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

வறியோர், அடையாள அட்டைகள் அல்ல

IFAD நிறுவனத்தினர் ஆற்றும் ஒவ்வொரு செயலிலும், அவர்களுக்கு முன் நிற்கும் வறியோர், வெறும் அடையாள அட்டைகள் அல்ல, மாறாக, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் உள்ளது என்பதையும், அவர்கள் நிலையில், இந்நிறுவனத்தினர், தங்களை பொருத்திப் பார்க்கவேண்டும் என்றும், திருத்தந்தை தன் உரையில் அழைப்பு விடுத்தார்.

உலகின் மீது கசையடிபோல விழும் பட்டினியைப் போக்குவதில் IFAD நிறுவனத்தினர் ஆற்றும் பணிகளுக்கு தன் ஆசீரையும் செபங்களையும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காக செபிக்கும்படி அவர்களிடம் விண்ணப்பித்து, தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 February 2019, 14:13