தேடுதல்

இறை வழிபாடு பேராயத்தின் உறுப்பினர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை இறை வழிபாடு பேராயத்தின் உறுப்பினர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை 

இறை வழிபாடு பேராயத்தின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை

வழிபாடு என்பது அவரவர் தன் விருப்பப்படி செய்யும் சடங்குகள் அல்ல, மாறாக, இறைமக்கள் இணைந்து வந்து மேற்கொள்ளும் பொதுவான முயற்சி - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வழிபாட்டில் தேவையான மாற்றங்களைக் கொணர 2ம் வத்திக்கான் சங்கம் பரிந்துரைத்த கருத்துக்களுக்கு வடிவம் கொடுப்பதுபோல், 1969ம் ஆண்டு, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், இறை வழிபாடு பேராயத்தை உருவாக்கியதன் 50ம் ஆண்டு நிறைவை இவ்வாண்டு சிறப்பிக்கிறோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பேராயத்தின் உறுப்பினர்களிடம் கூறினார்.

இறை வழிபாடு பேராயத்தினரின் சந்திப்பு

இறை வழிபாடு மற்றும் அருளடையாள கட்டுப்பாடு பேராயத்தின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்ற கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் அனைவரையும், பிப்ரவரி 14, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இப்பேராயம் ஆற்றிவரும் முக்கியமான பணிகளைப் பாராட்டியதுடன், அவர்கள் தொடர்ந்து ஆற்ற வேண்டிய கடமைகளையும் நினைவுறுத்தினார்.

இறை வழிபாடு பேராயம், துவக்கத்தில், வழிபாட்டு நூல்களை உருவாக்குவதில் தன் பணிகளை திறம்படச் செய்தது என்பதை தன் உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழிபாட்டு நூல்கள் மட்டும் மாற்றங்களைக் கொணராது, அதற்கு, மனமாற்றமும் அவசியம் என்று எடுத்துரைத்தார்.

வழிபாடும் மாற்றமும்

வழிபாடுகளில் மாற்றங்களைக் கொணர்வது, பேராயத்தின் பொறுப்பு மட்டுமல்ல, மாறாக, இப்பேராயம், உலகெங்கும் உள்ள மறைமாவட்டங்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

வழிபாடு ஒவ்வொருவர் வாழ்விலும் மாற்றங்களைக் கொணரவேண்டும் என்பதை உணர்ந்தவர்களாக, வாழ்வில் மாற்றங்களை கொணரும் உருவாக்க முயற்சிகளில் ஈடுபடுவது முக்கியம் என்றும், அத்தகைய உருவாக்கத்தில் வழிபாடு முக்கிய பங்காற்றவேண்டும் என்றும் திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

வழிபாடு என்பது அவரவர் தன் விருப்பப்படி செய்யும் சடங்குகள் அல்ல, மாறாக, இறைமக்கள் இணைந்து வந்து மேற்கொள்ளும் பொதுவான முயற்சி என்பதையும் திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2019, 15:08