தேடுதல்

‘புனித பேதுருவின் வட்டம்’ அமைப்பினருடன்  திருத்தந்தை பிரான்சிஸ் ‘புனித பேதுருவின் வட்டம்’ அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  

‘புனித பேதுருவின் வட்டம்’ அமைப்பினருக்கு வாழ்த்துக்கள்

செபம், செயல்கள், தியாகம் என்ற மூன்று தூண்களின் மீது, புனித பேதுருவின் வட்டம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித பேதுருவின் வட்டம் (The Circle of St Peter) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், கடந்த 150 ஆண்டுகளாக, இறைவனுக்காகவும், திருஅவைக்காகவும் ஆற்றிவரும் பணிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று தன் நன்றியைத் தெரிவித்தார்.

150ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

புனித பேதுருவின் வட்டம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், தங்கள் 150ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வேளையில், இவ்வமைப்பைச் சேர்ந்த 400க்கும் அதிகமான பிரதிநிதிகளை, திருப்பீடத்தின் கிளமெந்தீனா அரங்கத்தில், இவ்வியாழன் நண்பகலில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்கள் ஆற்றிவரும் பல்வேறு பணிகளைப் பாராட்டினார்.

1869ம் ஆண்டு, திருத்தந்தை 9ம் பயஸ் அவர்களுக்கும், இத்தாலிய அரசுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த வேளையில், திருத்தந்தைக்கு ஆதரவாகச் செயலாற்ற உருவாக்கப்பட்ட புனித பேதுருவின் வட்டத்தைச் சேர்ந்தவர்கள், திருஅவை மீது தங்கள் ஆழ்ந்த நம்பிக்கையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர் என்று திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

மூன்று தூண்கள்

செபம், செயல்கள், தியாகம் என்ற மூன்று தூண்களின் மீது, புனித பேதுருவின் வட்டம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்த மூன்று அம்சங்களில் தங்கள் அர்ப்பணத்தைப் புதுப்பிக்க, 150ம் ஆண்டு தகுந்த தருணம் என்று கூறினார்.

கிறிஸ்துவோடு நீங்கள் கொண்டிருக்கும் நேரடித் தொடர்பும், அதன் வெளிப்பாடாக திகழும் செபமும் நீங்கள் ஆற்றும் பணிகளுக்கும், மேற்கொள்ளும் தியாக முயற்சிகளுக்கும் உந்து சக்தியாக விளங்குகின்றது என்று, திருத்தந்தை, தன் உரையில் எடுத்துரைத்தார்.

மதம், இனம் தாண்டி வறுமைப்பட்டோருக்கு உதவி

உரோம் மறைமாவட்டத்தில், வறுமையில் வாடும் சகோதரர், சகோதரிகளுக்கு உதவி செய்வதை தங்கள் சிறப்பான அழைப்பாகக் கொண்டிருக்கும் புனித பேதுரு வட்டத்தின் உறுப்பினர்கள், மதம், இனம் என்ற பாகுபாடுகளை மறந்து, துன்புறும் அனைவருக்கும் உதவிகள் செய்வதற்கு, தன் சிறப்பான பாராட்டுக்களை திருத்தந்தை வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 February 2019, 15:23