தேடுதல்

புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், பெனெவெந்தோ உயர் மறைமாவட்டப் பிரதிநிதிகளுடன், திருத்தந்தை பிரான்சிஸ் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், பெனெவெந்தோ உயர் மறைமாவட்டப் பிரதிநிதிகளுடன், திருத்தந்தை பிரான்சிஸ் 

திருஅவை மீது குறை கூறுவோர் அதிகம் உள்ளனர்

நாம் அனைவருமே பாவிகள் என்ற எண்ணத்துடன், பணிவுடன் பணியாற்றிய புனித பாத்ரே பியோ அவர்கள், திருஅவையை உளமார நேசித்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குறையுள்ள மனிதர்களையும், பகைவர்களையும் கொண்டிருக்கும் திருஅவையை, புனித பாத்ரே பியோ உளமார நேசித்தார் என்றும், பாவிகளை உள்ளடக்கிய திருஅவையை அவர் தன் சொற்களால் சிதைக்கவில்லை என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலையில், தன்னைச் சந்திக்க வந்திருந்த பெனெவெந்தோ (Benevento) உயர் மறைமாவட்டப் பிரதிநிதிகளிடம் கூறினார்.

பிப்ரவரி 20, இப்புதனன்று தன் புதன் பொது மறையுரையை வழங்குவதற்கு முன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பாத்ரே பியோவின் திருத்தலத்தை உள்ளடக்கிய பெனெவெந்தோ உயர் மறைமாவட்டத்திலிருந்து வத்திக்கானுக்கு வருகை தந்த 2,500க்கும் அதிகமான பிரதிநிதிகளை, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் சந்தித்து, தன் வாழ்த்த்துக்களை வழங்கிய வேளையில் இவ்வாறு கூறினார்.

புனித பாத்ரே பியோ அவர்கள், தன் உடலில் திருக்காயங்களைப் பெற்றதன் 100ம் ஆண்டு நிறைவையும், அவரது மறைவின் 50ம் ஆண்டு நிறைவையும் சிறப்பிக்க, கடந்த ஆண்டு மார்ச் 17ம் தேதி பியெத்ரெல்சீனா (Pietrelcina) திருத்தலத்திற்கு தான் மேற்கொண்ட திருப்பயணத்தை திருத்தந்தை நன்றியோடு நினைவுகூர்ந்தார்.

பாவிகளை உள்ளடக்கிய திருஅவை மீது புனித பியோ காட்டிய உண்மையான அக்கறை, அன்பு ஆகியவற்றைக் குறித்துப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய காலத்தில், திருஅவையின் மீது குறைகள் கூறுவோரை அதிகமாக் காண்கிறோம் என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

நாம் அனைவருமே பாவிகள் என்ற எண்ணத்துடன் பணிவுடன் பணியாற்றிய புனித பியோ அவர்களைப் போல், நாமும், பாவிகள் என்ற எண்ணத்துடன் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், இந்தப் பணிவு இல்லாத வேளையில், குறைகளைச் சுட்டிக்காட்டும் அகந்தைக்கு நாம் உள்ளாகிறோம் என்பதையும் திருத்தந்தை பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார்.

வார்த்தைகளால் அல்ல, வாழ்வால் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என்று, அசிசி நகர் புனித பிரான்சிஸ் தன் சகோதரர்களிடம் கூறிய அறிவுரையைப் பின்பற்றி, நாமும் நற்செய்தியை நம் வாழ்வால் பறைசாற்ற முயல்வோம் என்று தன் உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2019, 15:33