திருத்தந்தை ஆறாம் பவுல் திருத்தந்தை ஆறாம் பவுல் 

மே மாதம் 29ம் தேதி, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் திருநாள்

புனிதத் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், 1920ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி அருள் பணியாளராகத் திருப்பொழிவு பெற்றதால், அந்நாளை, அவரது திருநாளாக அறிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2018ம் ஆண்டு, அக்டோபர் 14ம் தேதி, புனிதராக உயர்த்தப்பட்ட திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் திருநாள், மே மாதம் 29ம் தேதி கொண்டாடப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அறிக்கை, பிப்ரவரி 6, இப்புதனன்று வெளியிடப்பட்டது.

1897ம் ஆண்டு, செப்டம்பர் 26ம் தேதி, ஜியோவான்னி பத்திஸ்தா மொந்தீனி என்ற இயற்பெயருடன் பிறந்த திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், 1920ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி அருள் பணியாளராகத் திருப்பொழிவு பெற்றதால், அந்நாளை, அவரது திருநாளாக அறிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1963ம் ஆண்டு, ஜூன் 21ம் தேதி திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் மொந்தீனி அவர்கள், புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் துவக்கி வைத்த இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தை நிறைவுக்குக் கொணர்ந்தார்.

15 ஆண்டுகள் திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1978ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஆண்டவருடைய தோற்ற மாற்றம் திருநாளன்று, இறைவனடி சேர்ந்தார்.

புனிதராக உயர்த்தப்பட்ட திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் திருநாள், மே மாதம் 29ம் தேதி கொண்டாடப்படவேண்டும் என்று, திருத்தந்தை வழங்கிய அறிக்கையை, இறை வழிபாட்டுப் பேராயத்தின் தலைவர், கர்தினால் இராபர்ட் சாரா அவர்கள் வெளியிட்டார்.

இறை வழிபாட்டுப் பேராயம் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், உலக அமைதி, கலாச்சாரமயமாக்கப்படும் கிறிஸ்தவ நம்பிக்கை, திருவழிபாட்டில் மாற்றங்கள், மனித உயிரின் மதிப்பு ஆகியவற்றிற்கு ஆற்றிய பணிகள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 February 2019, 14:42