தேடுதல்

அபு தாபியில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு முன் வழங்கிய காணொளிச் செய்தி அபு தாபியில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு முன் வழங்கிய காணொளிச் செய்தி 

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி

ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்லும் முதல் திருத்தந்தை என்ற வரலாற்று பக்கத்தை எழுதுவதற்கு, இறைவன் தனக்கு வழங்கியுள்ள வாய்ப்புக்காக நன்றி கூறும் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிறரோடு நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கும், பல்வேறு கலாச்சாரங்களின் சந்திப்பிற்கும், ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகத்தைக் காண வருவதில் நான் மகிழ்வு கொள்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஞாயிறு, பிப்ரவரி 3ம் தேதி முதல், 5ம் தேதி முடிய, அமீரகத்தின் அபு தாபியில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு முன், அந்நாட்டினருக்கு, சனவரி 31, இவ்வியாழனன்று அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில், அந்நாட்டினரிடையே நிலவும் பரந்து விரிந்த கண்ணோட்டத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

பன்முகத்தன்மைக்கு, அமீரகத்தில் வழங்கப்படும் மரியாதையின் பயனாக, அங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், பாதுகாப்பான சூழலில் தங்கள் பணிகளை ஆற்றமுடிகிறது என்று திருத்தந்தை தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய Sheikh Zayed அவர்கள், "நாம் திரட்டும் பொருள்களில் அல்ல, மாறாக, மனிதர்களில் உண்மையான செல்வம் அடங்கியுள்ளது" என்று கூறியுள்ளதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

"மனித உடன்பிறந்த நிலை" என்ற தலைப்பில் நடைபெறும் பல்சமய கருத்தரங்கில் கலந்துகொள்ள, அமீரகத்தின் தலைவர், Sheikh Mohammed bin Zayed bin Sultan Al Nahyan அவர்கள் தனக்கு அழைப்பு விடுத்துள்ளதற்கு, திருத்தந்தை, தன் நன்றியைக் கூறினார்.

Al-Azharன் பெரிய குருவும், தன் நண்பரும், உடன்பிறப்புமான முனைவர் Ahmed Al-Tayeb அவர்களுக்கும், நடைபெறவிருக்கும் பல்சமய கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் காணொளிச் செய்தியில் நன்றி கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2019, 14:57