தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த ஐக்கிய அரபு அமீரகத் தலைவர் Sheikh Mohammed bin Zayed Al Nahyan திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த ஐக்கிய அரபு அமீரகத் தலைவர் Sheikh Mohammed bin Zayed Al Nahyan 

அபு தாபி திருத்தூதுப் பயணம், பாலங்களை அமைக்க உதவும்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் ஒருவர், அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் திருத்தூதுப் பயணமாக அமைகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கொள்ளவிருக்கும் ஐக்கிய அரபு அமீரகத் திருத்தூதுப் பயணத்தை, அந்நாட்டில் வாழ்கின்ற கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், மகிழ்வோடும் நம்பிக்கையோடும் எதிர்நோக்கி இருக்கின்றனர் என்று, அந்நாட்டு, சகிப்புத்தன்மை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தேசியவாதம் வளர்ந்து வருகின்ற காலக்கட்டத்தில், திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம், பாலங்களை அமைப்பதற்கு உதவும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ள,  சகிப்புத்தன்மை அமைச்சகம், திருத்தந்தையின் பிரசன்னம், பல்சமய உரையாடல் மற்றும் உள்ளூர் சமுதாயத்தின் வளர்ச்சியில், மைல்கல்லைப் பதிக்கும் என்று கூறியுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத் தலைவர், Sheikh Mohammed bin Zayed Al Nahyan மற்றும் தலத்திருஅவையின் அழைப்பின்பேரில், வருகிற பிப்ரவரி 03, ஞாயிறு முதல், பிப்ரவரி 05, செவ்வாய் வரை, அந்நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணம், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் ஒருவர், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொள்ளும் முதல் திருத்தூதுப் பயணமாக அமையும். மனித உடன்பிறப்பு உணர்வு என்ற தலைப்பில் நடைபெறும், பன்னாட்டு பல்சமய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, திருத்தந்தை அபு தாபி செல்கிறார்.

இத்திருத்தூதுப் பயணம் பற்றி ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த, அபு தாபி புனித அந்தோனியார் பேராலய பங்குக் குரு Bishoy அவர்கள், இப்பயணம், சகிப்புத்தன்மையில் உலகுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்ற ஐக்கிய அரபு அமீரகத்திற்கு, முடிசூட்டுவதாய் அமையும் என்று தெரிவித்தார்.

சுன்னி முஸ்லிம் பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில், ஏறக்குறைய பத்து இலட்சம் பேர் கிறிஸ்தவர்கள்.   

இதற்கிடையே, பிப்ரவரி 5ம் தேதி, Zayed விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் திருத்தந்தையின் திருப்பலியில் பங்கேற்க, ஏற்கெனவே, ஒரு இலட்சத்து இருபதாயிரம் நிழைவு சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஏனையோர் அனைத்து கத்தோலிக்க ஆலயங்களில் பெரிய திரைகளில் பார்ப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கிறிஸ்தவர்கள் வருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 January 2019, 15:08