தேடுதல்

Vatican News
பானமாவில் திருத்தந்தை பயன்படுத்தவிருக்கும் வாகனம் சனவரி 6ம் தேதி அந்நகரை சென்றடைந்தபோது... பானமாவில் திருத்தந்தை பயன்படுத்தவிருக்கும் வாகனம் சனவரி 6ம் தேதி அந்நகரை சென்றடைந்தபோது...  (AFP or licensors)

திருத்தந்தையின் வரவுக்காகக் காத்திருக்கும் பானமா

பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், 2 இலட்சத்திற்கும் அதிகமான இளையோர் கலந்துகொள்வர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இம்மாதம் 22ம் தேதி முதல் 27ம் தேதி முடிய பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், 2 இலட்சத்திற்கும் அதிகமான இளையோர் கலந்துகொள்வர் என்று, இந்நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாகப் பேசிய Giancarlo Candenedo அவர்கள் கூறினார்.

155 நாடுகளிலிருந்து வருகை தரும் இவ்விளையோரில், ஐந்து கண்டங்களிலிருந்தும் 1000த்திற்கும் அதிகமான பழங்குடியின இளையோர், சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இளையோர் நாள் நிகழ்வுகளின் துவக்க கட்டமாக, சனவரி 16ம் தேதி முதல் 19ம் தேதி முடிய பானமா நகரில் பல்வேறு இளையோர் கூட்டங்கள் நடைபெறும் என்றும், 23ம் தேதி முதல், 27ம் தேதி முடிய திருத்தந்தையோடு இணைந்து இளையோர் பல்வேறு வழிபாடுகளிலும், கூட்டங்களிலும் கலந்துகொள்வர் என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

திருத்தந்தையின் வரவுக்காகக் காத்திருக்கும் பானமா ஒரு சிறு நாடு என்பதாலும், உலக இளையோர் நாள் நிகழ்வுகள், உலகளாவிய கவனத்தைப் பெறும் என்ற காரணத்தாலும், இந்நிகழ்வுகள் முழு வெற்றியடையும் வகையில், இந்நாட்டு அரசின் பல்வேறு துறைகள், முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன என்று கூறப்படுகிறது.  

பல்வேறு நாடுகளில் சனவரி மாதம் கல்வி ஆண்டின் ஒரு பகுதியாக இருப்பதால், இளையோர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்பது கடினமாக உள்ளது என்றும், இருப்பினும் ஒவ்வொரு மறைமாவட்டத்திலிருந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் ஒருங்கிணைப்புக் குழு கூறியுள்ளது.

09 January 2019, 15:17