தேடுதல்

34வது உலக இளையோர் நாள் 34வது உலக இளையோர் நாள் 

அடுத்த உலக இளையோர் நாள் லிஸ்பனில் ஜூலை,2022

ஓர் உலக இளையோர் நாள், ஐரோப்பாவில் நடைபெற்றால், அடுத்த இளையோர் நாள் ஐரோப்பாவுக்கு வெளியே நடைபெறுவது வழக்கத்தில் இருந்து வருகிறது

மேரி தெரேசா - வத்திக்கான்

அன்னை மரியா போன்று, ஆண்டவருக்கு, ஆகட்டும் எனச் சொல்வது, வாழ்வை, அதன் வலுவற்றநிலை, எளிமை, மோதல்கள், தொல்லைகள் என, எல்லாவற்றுடனும் ஏற்பதற்கு, ஒருவர் தன்னையே தயாரிப்பதாகும். இளையோரின் வருங்காலக் கனவுகள் நிறைவேற்றப்பட, சமுதாயம் வழியமைக்க வேண்டும். இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 27, இஞ்ஞாயிறன்று, பானமா நகரின் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் திறந்தவெளி அரங்கத்தில் நிறைவேற்றிய 34வது உலக இளையோர் நாள் நிறைவு திருப்பலியில் கேட்டுக்கொண்டார். இத்திருப்பலியில், கொலம்பியா, கோஸ்டா ரிக்கோ, எல் சால்வதோர், குவாத்தமாலா, ஹொண்டூராஸ், பானமா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்கள், போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பன் நகர மேயர் உட்பட, ஏறக்குறைய ஏழு இலட்சம் பேர் கலந்துகொண்டனர். இத்திருப்பலியின் இறுதியில், திருத்தந்தைக்கு நன்றி கூறிய, திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர், கர்தினால் Kevin Joseph Farrell அவர்கள், “Nos vemos en Portugal” அதாவது அடுத்து போர்த்துக்கல் நாட்டில் பார்ப்போம் என அறிவித்தவுடன், இளையோரின் குறிப்பாக, போர்த்துக்கல் நாட்டிலிருந்து வந்திருந்த இளையோரின் ஆர்ப்பரிப்பு வானை எட்டியது. போர்த்துக்கல் இளையோர், தங்கள் நாட்டுக் கொடியை உயர்த்திப் பிடித்து ஆரவாரம் செய்தனர். அடுத்த உலக இளையோர் நாள், 2022ம் ஆண்டு ஜூலையில், போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் நகரில் நடைபெறும் என மேலும் அறிவித்தார், கர்தினால் Farrell அவர்கள். ஓர் உலக இளையோர் நாள், ஐரோப்பாவில் நடைபெற்றால், அடுத்த இளையோர் நாள் ஐரோப்பாவுக்கு வெளியே நடைபெறுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. 1985ல் இத்தாலியின் உரோமையிலும், 1987ல் அர்ஜென்டீனாவின் புவனோஸ் அய்ரெசிலும், 1989ல் இஸ்பெயினின் சந்தியாகோ தெ கொம்போஸ்தெலாவிலும், 1991ல் போலந்து நாட்டின் செஸ்டகோவாவிலும், 18993ல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் டென்வரிலும், 1995ல் பிலிப்பீன்ஸின் மனிலாவிலும், 1997ல் பிரான்சின் பாரிசிலும், 2000மாம் ஆண்டில் இத்தாலியின் உரோமையிலும், 2002ல் கானடாவின் டொரொன்டோவிலும், 2005ல் ஜெர்மனியின் கொலோனிலும், 2008ல் ஆஸ்திரேலியாவின் சிட்னியிலும், 2011ல் இஸ்பெயினின் மத்ரித்திலும், 2013ல் பிரேசிலின் ரியோ தெ ஜெனெய்ரோவிலும்,  2016ல் போலந்தின் கிரக்கோவிலும், 2019ல் பானமா நாட்டின் பானமாவிலும் உலக இளையோர் நாள்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2019, 16:00