தேடுதல்

பானமாவில் இளையோர் பானமாவில் இளையோர் 

உலக கத்தோலிக்க இளையோர் நாள் வரலாறு

1985ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், உலக இளையோர் நாளை உருவாக்கினார். அதே 1985ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால், உலக இளையோர் ஆண்டு சிறப்பிக்கப்பட்டது

மேரி தெரேசா - வத்திக்கான்

மத்திய அமெரிக்காவில், பானமா நாடு என்று சொன்னாலே அந்நாட்டின் உலகப் புகழ்பெற்ற பானமா கால்வாய்தான் முதலில் நினைவுக்கு வரும். அட்லாண்டிக் பெருங்கடலை, பசிபிக் பெருங்கடலோடு இணைக்கின்ற பானமா கால்வாய், 82 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதன் வழியாக இடம்பெறும் கப்பல் போக்குவரத்து, வர்த்தகம் போன்றவைதான், பானமா நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரிதும் உதவுகின்றது. பானமா நாட்டின் தலைநகரமான பானமா, பசிபிக் பெருங்கடலுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ளது. இந்நகரம், 1519ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, இஸ்பானிய நாடுகாண் பயணி Pedro Arias Dávila என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நகரிலிருந்தே, தென் அமெரிக்காவில் வேறுபல கண்டுபிடிப்புகளும், பெரு நாட்டில் Inca பேரரசை வீழ்த்தும் நடவடிக்கைகளும் தொடங்கின. இஸ்பானியர்கள், அமெரிக்க கண்டத்திலிருந்து பொன்னையும், வெள்ளியையும் தங்கள் நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு உதவிய மிக முக்கிய வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகவும், பானமா நகரம் விளங்கியது. 1671ம் ஆண்டு சனவரி 28ம் நாளன்று, Henry Morgan என்ற பணக்கார அடிமை வியாபாரி, இந்நகரைச் சூறையாடி, தீ வைத்தார். இதனால் அழிந்த இந்நகரம், அதற்கு இரு ஆண்டுகள் சென்று, 1673ம் ஆண்டு சனவரி 28ம் தேதியன்று மீண்டும் உருவாக்கப்பட்டது. இவ்வாறு, வரலாற்றில் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கும் பானமா நகரில், சனவரி 22, இச்செவ்வாய் மாலையில், 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இதனால் பானமா நகரம், உலக இளையோரால் பொலிவுடன் விளங்குகிறது என்றும், இந்நிகழ்வுகளில் ஏறக்குறைய 155 நாடுகளைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான இளையோர் தங்கள் நாடுகளின் கொடிகளுடன் பானமா நகரை அலங்கரித்து வருகின்றனர் என்றும், செய்திகள் கூறுகின்றன.

உலக இளையோர் நாள்

திருஅவைக்கும், உலகுக்கும் இளையோரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது, இளையோர், திருஅவைக்கும், உலகுக்கும் தேவைப்படுகின்றனர் என்று அடிக்கடிச் சொல்லி, திருத்தந்தையரும், திருஅவையும் இளையோரை ஊக்குப்படுத்தி வருகின்றனர். இதை வெளிப்படையாக அறிவிக்கும் விதமாக, 1985ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், உலக இளையோர் நாளை உருவாக்கினார். இதே 1985ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால், உலக இளையோர் ஆண்டாகவும் அறிவிக்கப்பட்டு, உலகெங்கும் சிறப்பிக்கப்பட்டது. போலந்து நாட்டில், கத்தோலிக்க இளையோர்க்கென, ‘குழு நாள்’ என்ற தலைப்பில், கோடைகால முகாம்கள் மூன்று நாள்களுக்கு நடைபெறுகின்றன. இதனை, ஒளி-வாழ்வு இயக்கம் நடத்துகின்றது. இந்நடவடிக்கை ஏற்படுத்திய நல்தாக்கத்தால், போலந்து நாட்டைச் சேர்ந்த, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், உலக இளையோர் நாளை உருவாக்கினார் எனச் சொல்லப்படுகின்றது. அதன்படி 1986ம் ஆண்டில் முதல் உலக இளையோர் நாள், கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டது. திருஅவையின் ஆயர்கள், தங்கள் தங்கள் மறைமாவட்டங்களில், குருத்தோலை ஞாயிறன்று இந்த உலக நாளைச் சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டனர். மறைமாவட்ட அளவில் ஒவ்வோர் ஆண்டும், பன்னாட்டு அளவில், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், இந்த உலக நாள் சிறப்பிக்கப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும், ஒவ்வொரு தலைப்பில் கடைப்பிடிக்கப்படும் இந்த உலக நாளுக்கென திருத்தந்தையரும், செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

உலக இளையோர் நாள் 1986-1993

1986ம் ஆண்டு இத்தாலி நாட்டின் உரோம் நகரில், “நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள் (1பேது.3,15)” என்ற தலைப்பிலும், 1987ம் ஆண்டு அர்ஜென்டினா நாட்டின் புவனோஸ் அய்ரெஸ் நகரில், “கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம் (1யோவா.4,16)” என்ற தலைப்பிலும், 1989ம் ஆண்டு, இஸ்பெயின் நாட்டின் சந்தியாகோ தெ கொம்போஸ்தெலா நகரில், “நானே வழியும், உண்மையும், வாழ்வும் (யோவா.14,6)” என்ற தலைப்பிலும், 1991ம் ஆண்டு போலந்து நாட்டின் செஸ்டகோவா நகரில், “நீங்கள் பிள்ளைகளுக்குரிய ஆவியாரைப் பெற்றுக் கொண்டீர்கள் (உரோ.8,15)” என்ற தலைப்பிலும், 1993ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் கொலொராடோ மாநிலத்தின் டென்வர் நகரில், “அவர்கள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டும் நான் வந்துள்ளேன் (யோவா.10,10)” என்ற தலைப்பிலும் சிறப்பிக்கப்பட்டன.

1995ல் உலக இளையோர் நாள்

1995ம் ஆண்டு சனவரி 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை, ஆசியாவில் முதன்முறையாக, பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில், “தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன் (யோவா.20,21)” என்ற தலைப்பில், உலக இளையோர் நாள் நடைபெற்றது. அவ்வாண்டு சனவரி 12ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், பிலிப்பைன்ஸ் சென்று, கலந்துகொண்ட இளையோர் நாள் நிகழ்வுகளில், ஏறக்குறைய ஐம்பது இலட்சம் பேர் பங்குபெற்று, வரலாறு படைத்தனர். இந்நிகழ்வு நடைபெற்று இருபது ஆண்டுகள் சென்று, 2015ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு, திருத்தூதுப்பயணம் மேற்கொண்டவேளையில், ஏறக்குறைய அறுபது இலட்சம் பேர் பங்குபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1995ம் ஆண்டு சனவரி 13ம் தேதி, மனிலா புனித தாமஸ் பல்கலைக்கழகத்தில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், நிறைவேற்றிய உலக இளையோர் நாள் திருப்பலியில், அழைப்பின் மேன்மை பற்றி உணர அழைப்பு விடுத்தார். நம்மை அனுப்புவர் கிறிஸ்துவே. இளையோரே, உங்களை கிறிஸ்து அன்புடன் நோக்குகிறார், என்னைப் பின்செல்லுங்கள் என்று அழைக்கிறார் கிறிஸ்து, உங்கள் வாழ்வு அர்த்முள்ளதாய், மாண்புடையதாய் விளங்குவதற்கு கிறிஸ்து விரும்புகிறார் என்றார் திருத்தந்தை 2ம் ஜான் பால். மேலும், மனிலாவில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், வாழ்வின் பொருள், அன்புகூர அழைப்பு, தவிர்க்கமுடியாத மனித மாண்பு, சுதந்திரம், பொறுப்புணர்வு போன்ற தலைப்புகளில் இளையோரிடம் பேசினார், திருத்தந்தை 2ம் ஜான் பால். உங்களை ஏமாற்றதவராகிய கிறிஸ்துவில் உங்கள் வாழ்வைக் கட்டியெழுப்புங்கள் எனவும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு மனிதரின் தவிர்க்கமுடியாத மனித மாண்பை நீங்கள் ஆதரித்தால், இயேசு கிறிஸ்துவின் உண்மையான முகத்தை உலகுக்கு வெளிப்படுத்துவீர்கள், இயேசு கிறிஸ்து உங்கள் நண்பராக இருக்க விரும்புகிறார், துணிச்சலாக, உறுதியாக இருங்கள் (cf.யோவா.15:14) என்றும் திருத்தந்தை இளையோரிடம் கூறினார்.   

உலக இளையோர் நாள் 1996-2019

1995ம் ஆண்டில், மனிலாவில் நடைபெற்ற உலக இளையோர் நாளுக்குப் பின்னர், 1997ம் ஆண்டில் பிரான்சின் பாரிஸ் நகரில், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்? வந்து பாருங்கள் (யோவா.1,38-39)” என்ற தலைப்பில் சிறப்பிக்கப்பட்டது. இரண்டாயிரமாம் மாபெரும் யூபிலி ஆண்டில், “வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார் (யோவா.1,14)” என்ற தலைப்பில் உரோம் நகரிலும், 2002ம் ஆண்டு, “நீங்கள் மண்ணுலகின் உப்பு, நீங்கள் உலகிற்கு ஒளி மத்.5,13-14)” என்ற தலைப்பில், கானடாவின் டொரொன்டோ நகரிலும், 2005ம் ஆண்டில், “நாங்கள் வணங்க வந்தோம் (மத்.2,2)” என்ற தலைப்பில், ஜெர்மனியின் கொலோன் நகரிலும், 2008ம் ஆண்டு, “தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெறுவீர்கள், நீங்கள் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்  (தி.ப.1,8)”  என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும், 2011ம் ஆண்டு, “நீங்கள் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள் (கொலோ.2,7)” என்ற தலைப்பில், இஸ்பெயின் நாட்டின் மத்ரித்திலும், 2013ம் ஆண்டு “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் (மத்.28,19)” என்ற தலைப்பில், பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜெனெய்ரோவிலும், 2016ம் ஆண்டு “இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் (மத்.5,7)” என்ற தலைப்பில், போலந்து நாட்டின் கிரக்கோ நகரிலும் உலக இளையோர் நாள் சிறப்பிக்கப்பட்டன. 2019ம் ஆண்டு, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக்.1,38)”  என்ற தலைப்பில் பானமா நகரில் சிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

இளையோர் நாள் சிலுவை

முதல் உலக இளையோர் நாள் நிகழ்வில், இளையோர்க்கு, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், ஒரு பெரிய மரச்சிலுவையை இளையோரிடம் ஒப்படைத்தார். அந்தச் சிலுவையானது, அடுத்தடுத்து நடைபெறும் நாடுகளின் இளையோரிடம், குருத்தோலை ஞாயிறன்று, வத்திக்கானில் திருத்தந்தையர் நிகழ்த்தும் திருவழிபாட்டில் வழங்கப்பட்டு வருகின்றது. உலக கத்தோலிக்க இளையோர் நாள் நிகழ்வுகள், ராக் இசை விழா போன்று, நடைபெறுவது தவிர்க்கப்பட வேண்டுமென்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார். கத்தோலிக்கத் திருஅவையில் இடம்பெறும் இந்த மாபெரும் இளையோர் நிகழ்வு, நவீன இளையோர் கலாச்சாரத்தின், பல்வேறு வகை எனக் கருதப்படாமல், நீண்டகால வெளிப்புற மற்றும் உள்புற வாழ்வுப் பாதைக்குப் பலன் அளிக்கும் விதமாகச் சிறப்பிக்கப்பட வேண்டுமென்று அவர் கூறியிருந்தார். அதன்படி, இந்த நிகழ்வுகளுக்கு, மறைமாவட்ட அளவில், ஆன்மீக முறையில் இளையோர் தயாரிக்கப்படுகின்றனர். இந்நிகழ்வுகளின்போதும், பாவமன்னிப்பு வழிபாடு, ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுதல், மறைக்கல்விகள், சிலுவைப்பாதை, திருப்பலிக் கொண்டாட்டங்கள் போன்றவை இடம்பெறுகின்றன. உலக இளையோர் நாள் நிறைவடைவதற்கு முந்தின இரவு இளையோர் இரவு முழுவதும் திருநற்கருணை ஆராதனை செபத்திலும் ஈடுபடுகின்றனர்.            

பானமா நாட்டில் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள இளையோர் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, விமானப் பயணத்திற்கும், பிற செலவுகளுக்கு, இந்தியாவைச் சேர்ந்த லூக்கா என்பவர், பட்டங்கள் கட்டி விற்று பணம் சேர்த்துள்ளார். குவாத்தமாலா நாட்டிலிருந்து பானமா வந்திருக்கும் சாரா என்ற இளம்பெண், கடுமையான மலைப்பாதைகளில் இருபது மணிநேரம் பயணம் செய்து வந்துள்ளார். பேருந்திலோ, விமானத்திலோ பயணம் செய்வதற்குப் பண வசதியோ, வேறு வசதியோ இல்லாத தென் அமெரிக்க இளையோர் பலர், அவ்வழியே வாகனங்களில் செல்பவர்களின் துணையோடும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு வருகின்றனர். இவ்வாறு வந்துள்ளவர்களில் 500 பேருக்கு உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளில் தங்குவதற்கு அனுமதியளித்துள்ளனர். இவ்வளவு ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் இளையோர், தங்கள் வாழ்வில் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும், தெளிவும் பெற்று அவரவர் இல்லம் திரும்புவதற்குச் செபிப்போம். அந்நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக, சனவரி 23 இப்புதன் காலையில் வத்திக்கானிலிருந்து பானமாவிற்குப் புறப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகவும் செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2019, 15:17