தேடுதல்

திருத்தந்தையுடன் உலக இளையோர் நாள் தன்னார்வலர்கள் சந்திப்பு -280119 திருத்தந்தையுடன் உலக இளையோர் நாள் தன்னார்வலர்கள் சந்திப்பு -280119 

34வது உலக இளையோர் நாள் தன்னார்வலர்கள் சந்திப்பு

உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் பங்கு பெற கிடைத்த வாய்ப்பு மற்றும் அனுபவத்திற்காக, கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பானமாவில் நல்ல சமாரியர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பை நிறைவு செய்து, பானமா நகர் திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறு பிற்பகல் உள்ளூர் நேரம் மாலை 4.10 மணிக்கு, அந்நகரின் ரொமெல் பெர்னான்டெஸ் ஹூவான் தியஸ் அரங்கம் சென்று, 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் பணியாற்றிய தன்னார்வலர்களைச் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்நாள்களில், இருபதாயிரம் பானமா தன்னார்வலர்களும், 2,200 பன்னாட்டு தன்னார்வலர்களும் பணியாற்றினர். பளிச்செனத் தெரியும் மஞ்சள் நிற சட்ட்களை அணிந்துகொண்டு, எப்போதும் புன்முறுவலுடன் இவர்கள் பணியாற்றினர். இவர்களில்  ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் இந்த அரங்கத்தில் கூடியிருந்தனர். இந்தப் பணியாளர்களுக்கு நெஞ்சம்நிறை நன்றி தெரிவித்த திருத்தந்தை, இவர்கள், இந்த அனுபவத்தை, எளிமை மற்றும் சாதாரண அன்றாட செயல்களால் சான்று பகருமாறு கேட்டுக்கொண்டார்.

அன்றாட செயல்களால் சான்று பகர...

சேவையையும், மறைப்பணியையும் முதலிடத்தில் வைக்கும்போது, மற்ற அனைத்தும் பின்தொடர்வதை நீங்கள் பார்ப்பீர்கள். இந்த உலக இளையோர் நாளில், ஒருவர் ஒருவருடன் தொடர்புகொண்டபோது, விசுவாசம் எவ்வளவு உயிரூட்டமுள்ளதாய், உண்மையானதாய் மாறியதை அனுபவித்திருப்பீர்கள். பகிரப்பட்ட கனவை எட்டுவதில், மற்றவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பிலிருந்து ஒரு வித்தியாசமான மகிழ்வை அனுபவித்திருப்பீர்கள். முக்கியமற்றதாய், சாதாரணமானதாய் இருந்தபோதிலும்கூட, சிறுசிறு விளக்கங்களுக்கும் நீங்கள் கவனம் செலுத்தியதற்கு மிக்க நன்றி. உங்கள் பணியை உயிர்த்துடிப்புடன் ஆற்றுவதற்கும், இந்நிகழ்வுகளை ஆழமாக உணர்வதற்கும் செபம் உதவியுள்ளது. நீங்கள் வேறு காரியங்கள் செய்வதைத் தேர்ந்தெடுத்திருக்கலாம், ஆனால் இப்பணியில் ஈடுபட விரும்பினீர்கள். ஸ்டெல்லா மாரிஸ் என்ற பானமா நாட்டு தன்னார்வலர் தனது வயதான மூன்று பாட்டி தாத்தாக்களைப் பராமரிப்பதற்காக, கிரக்கோவில் நடைபெற்ற உலக இளையோர் நாள் கொண்டாட்டத்திற்குச் செல்லவில்லை. பிறரின் நன்மைக்காக, பிறரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நாம் தாராளத்துடன் அல்லது அன்புடன் ஆற்றும் செயல்களுக்கு, கடவுள் ஒருபோதும் பலனளிக்காமல் இருப்பதில்லை. ஆண்டவர் அதற்கு பன்மடங்காகப் பலன் அளிக்கிறார். நீங்கள் பெற்றுள்ள இந்த அனுபவத்தை, எளிமையான செயல்களால் சான்று பகருங்கள் என உரையாற்றினார் திருத்தந்தை. மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தையின் டுவிட்டரிலும், நீங்கள் பார்த்தவை மற்றும், கேட்டவை அனைத்திற்கும், ஏராளமான வார்த்தைகளால் அல்ல, மாறாக, எளிமையான, ஒவ்வொரு நாள் செயல்களால், எங்கும் சென்று சாட்சியாகத் திகழுங்கள் என்ற சொற்களே வெளியாகியிருந்தன.  

இந்நாள்களில், இந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் இளையோரோடு சேர்ந்து, அனுபவம் பெறுவதற்கு கிடைத்த வாய்ப்புக்காக, கடவுளுக்கு நன்றி சொல்கிறேன், இந்த நிகழ்வுகளுக்கு, தங்களின் செபங்களினால் ஆதரவளித்த மற்றும், கடின வேலையாலும், முயற்சிகளாலும் உதவிய எல்லாருக்கும் எனது நன்றி என்ற சொற்களையும் இஞ்ஞாயிறன்று திருத்தந்தை தன் டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2019, 16:09