தேடுதல்

பானமாவுக்கு பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பானமாவுக்கு பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை 

2019ல் திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கொள்ளும் முதல் பயணம்

"பானமாவில் உலக இளையோர் நாள் நிகழ்வுக்காக செபிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 23, இப்புதனன்று, பானமா நாட்டை நோக்கி, தன் 26வது திருத்தூதுப் பயணத்தைத் துவங்குவதற்கு முன்னதாக, இப்பயணத்திற்காக செபிக்குமாறு விண்ணப்பித்து, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"பானமாவில் உலக இளையோர் நாள் நிகழ்வுக்காக நான் புறப்படுகிறேன். திருஅவைப் பயணத்தின் ஒரு பகுதியாக விளங்கும், இந்த அழகான, மற்றும், முக்கியமான நிகழ்வுக்காக செபிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், பல நாடுகளிலிருந்து வந்திருந்த 8 புலம்பெயர்ந்த இளையோரை, இப்புதன் காலை, பியூமிச்சினோ விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர், சாந்தா மார்த்தா இல்லத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பானமா நாட்டில் கலந்துகொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளில், பானமா நகரில், இளையோருக்கென உருவாக்கப்பட்டுள்ள சிறையில் 200க்கும் அதிகமான இளையோரை, சனவரி 25ம் தேதி, வெள்ளியன்று சந்திக்கிறார் என்பதும், AIDS நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இளையோரை, சனவரி 27ம் தேதி, ஞாயிறன்று சந்திக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

2019ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் பானமா நாட்டில் இடம்பெறுகிறது. 1983ம் ஆண்டு திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் பானமா நாட்டிற்குப் பயணம் மேற்கொண்ட முதல் திருத்தந்தையாவார்.

"நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்ற மையக்கருத்துடன் நடைபெறும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகள், அன்னை மரியாவை மையப்படுத்தி அமைந்துள்ளது.

1987ம் ஆண்டு, ஆர்ஜென்டீனா நாட்டின் புவனஸ் அயிரெஸ் நகரிலும், 2013ம் ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனேய்ரோ நகரிலும் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளைத் தொடர்ந்து, பானமா நாட்டில் நடைபெறுவது, இலத்தீன் அமெரிக்கக் கண்டத்தில் நடைபெறும் மூன்றாவது இளையோர் சந்திப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2019, 15:42