தேடுதல்

பானமா நோக்கிய விமான பயணத்தில் திருத்தந்தை பானமா நோக்கிய விமான பயணத்தில் திருத்தந்தை 

பானமா நாட்டிற்கு புறப்பட்ட திருத்தந்தை

நம்பிக்கை, மற்றும், எதிர்நோக்கின் அடையாளமாக உலகின் பல பகுதிகளிலிருந்தும் பானமா நாட்டிற்கு வருகை தந்துள்ள இளையோரை நான் சந்திக்கச் செல்கிறேன் – திருத்தந்தையின் தந்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பானமா நாட்டில் துவங்கியுள்ள 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 23, இப்புதன் காலை, 9.51 மணிக்கு, உரோம் நகர் பியூமிச்சீனோ விமான தளத்திலிருந்து புறப்பட்டார்.

ஏறத்தாழ 13 மணி நேரம் நடைபெற்ற இந்த விமானப் பயணத்தில், திருத்தந்தையின் விமானம் கடந்துசெல்லும் அனைத்து நாடுகளில் உள்ள தலைவர்களுக்கும், திருத்தந்தை, தந்திச் செய்திகளை அனுப்பிய வண்ணம் சென்றார்.

விமானம் உரோமிலிருந்து புறப்பட்டதும், இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பிய தந்திச் செய்தியில், நம்பிக்கை, மற்றும், எதிர்நோக்கின் அடையாளமாக உலகின் பல பகுதிகளிலிருந்தும் பானமா நாட்டிற்கு வருகை தந்துள்ள இளையோரை தான் சந்திக்கச் செல்வதாக, குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல், அமெரிக்க ஐக்கிய நாடு, தொமினிக்கன் குடியரசு, நெதர்லாந்து மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கு, திருத்தந்தை தன் வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவிக்கும் வகையில் தந்திச் செய்திகளை அனுப்பியவண்ணம் பயணித்தார்.

திருத்தந்தை பயணம் செய்யும் விமானம், பானமா நகர் Tucmen பன்னாட்டு விமான நிலையத்தை, அந்நாட்டு நேரம் மாலை 4.30 மணியளவில், அதாவது இந்திய நேரம், சனவரி 24, இவ்வியாழன் அதிகாலை மூன்று மணியளவில் சென்றடையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2019, 15:30