தேடுதல்

பானமாவுக்கு பிரியாவிடை பானமாவுக்கு பிரியாவிடை 

திருத்தந்தையின் பானமா திருத்தூதுப் பயண நிறைவு

சனவரி 23ம் தேதி பானமா நாட்டுக்கு, தனது 26வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை துவங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 28ம் தேதி அதனை நிறைவு செய்தார்

மேரி தெரேசா - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பானமா நகரில் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளை நிறைவுசெய்து, சனவரி 28, இத்திங்கள் பகல் 11.50 மணியளவில் உரோம் நகர் சம்ப்பினோ விமான நிலையத்தில் வந்திறங்கினார். வெளிநாட்டு திருத்தூதுப் பயணங்களைத் துவங்குவதற்கு முன்னும், அதை நிறைவு செய்த பின்னரும், திருத்தந்தை வழக்கம்போல் செல்லும், உரோம் மேரி மேஜர் அன்னை மரியா பசிலிக்கா சென்று, அன்னை மரியாவுக்கு நன்றி செலுத்தி, மலர்களையும் காணிக்கையாக அர்ப்பணித்தார். மேலும், இத்திங்களன்று உரோம் கொன்சிலாட்சியோனே பெரிய கலையரங்கில் நடைபெற்ற "Giudizio Universale" எனப்படும் உலக இறுதி தீர்ப்பு பற்றிய ஒலி-ஒளி இசைக்கலவை காட்சியை, 1,300 ஏழைகள் சென்று பார்ப்பதற்கு திருத்தந்தை உதவி செய்துள்ளார் என, பாப்பிறையின் தர்ம செயல்கள் அலுவலகம் அறிவித்தது. மேலும், பானமாவிலிருந்து திரும்பும் வழியில் அவர் கடந்து வந்த பானமா, கொலம்பியா, Curacao கரீபியன் தீவு, தொமினிக்கன் குடியரசு, கோஸ்டா ரிக்கோ, போர்த்துக்கல், இஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு நன்றியும், செபங்களும், ஆசிரும் நிறைந்த தந்திச் செய்திகளையும், அந்தந்த நாடுகளுக்குமேல் விமானம் பறக்கும்போது அனுப்பி வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 11 மணி 35 நிமிடங்கள் கொண்ட, பானமா நகரிலிருந்து உரோம் திரும்பிய விமானப் பயணத்தில், தன்னோடு பயணம் செய்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் திருத்தந்தை பதில் சொன்னார். சிறார் பாதுகாப்பு, ஆயர்களுக்கு மறைக்கல்வி, கருவில் வளரும் சிசுக்கள் மீது கருணை, புலம்பெயர்ந்தோர் நெருக்கடி, அருள்பணியாளர் திருமணம், பள்ளிகளில் பாலியல் கல்வி, வெனெசுவேலா மக்களுக்கு ஆதரவு உட்பட பல தலைப்புகளில் தன் எண்ணங்களை வெளியிட்டார். இஞ்ஞாயிறு பிற்பகலில், 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் பணியாற்றிய தன்னார்வலர்களைச் சந்தித்த பின்னர், அங்கிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள விமான நிலையத்திற்கு காரில் சென்றார் திருத்தந்தை. பானமா அரசுத்தலைவர், அவரின் துணைவியார், 1,500 விசுவாசிகள், இன்னும் திருஅவைத் தலைவர்கள், திருத்தந்தையை உரோமைக்கு வழியனுப்பி வைத்தனர். இத்துடன் திருத்தந்தையின் 26வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வந்தது. அடுத்து 27வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக, வருகிற பிப்ரவரி 3ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2019, 15:52