தேடுதல்

Vatican News
இளம் கைதிக்கு ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் திருத்தந்தை இளம் கைதிக்கு ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் திருத்தந்தை  (ANSA)

Las Garzas de Pacora தடுப்புக் காவல் மையத்தில் திருத்தந்தை

திருத்தந்தை அமர்வதற்கு, மரத்தாலான ஒரு பெரிய நாற்காலி, திருத்தந்தையிடம் நினைவுப் பரிசாக அளிப்பதற்கு, பல்வகை ரொட்டிகள், ஓர் ஓவியம் போன்றவற்றை கைதிகள் தயாரித்திருந்தனர்

மேரி தெரேசா – வத்திக்கான்

மத்திய அமெரிக்க நாடான பானமா தலைநகர், பானமா நகரில் நடைபெறும், 34வது உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நகரில் நான்கு நாள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் நாளாகிய சனவரி 24, இவ்வியாழனன்று, அரசுத்தலைவர், அரசியல், தூதரக அதிகாரிகள், சமயத் தலைவர்கள், இலத்தீன் அமெரிக்க ஆயர்கள், உலக இளையோர் ஆகியோரைச் சந்தித்தார், திருத்தந்தை. நற்செய்திப் பணிக்கு, கிறிஸ்துவின் பரிவன்பும், இரக்கமும், மிகவும் அவசியம் என்பதை, திருத்தந்தை ஆயர்களிடம் வலியுறுத்தினார். இரண்டாவது நாளான, சனவரி 25, இவ்வெள்ளியன்று, நடைபெற்ற நிகழ்வுகளில், திருத்தந்தை வலியுறுத்திய இரக்கப்பண்பு வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள இயலாமல் உள்ள இளம் சிறைக் கைதிகளையே, இந்நாளில் முதலில் சந்தித்தார் திருத்தந்தை. இவ்வெள்ளி உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு, பானமா திருப்பீட தூதரகத்தில் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், அந்த இடத்திலிருந்து 42 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Las Garzas de Pacora சிறார் தடுப்புக் காவல் மையத்திற்கு காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கைதிகளின் தயாரிப்புகள்

இவ்வெள்ளி, காலை 10.30 மணியளவில், அதாவது இந்திய இலங்கை நேரம், இவ்வெள்ளி இரவு 11 மணிக்குச் Las Garzas de Pacora சிறையிலுள்ள இளம் கைதிகள் சந்திப்பு துவங்கியது. உலக இளையோர் நாள் இலச்சினை பதிக்கப்பட்ட பனியன்களையே இந்த இளம் கைதிகளும் அணிந்திருந்தனர். பல மாதங்களாக இச்சந்திப்புக்காகத் தயார் செய்த இந்த இளம் கைதிகள், திருத்தந்தைக்கு மரத்தாலான ஒரு செங்கோலையும், முப்பது இளம் கைதிகள், பாவசங்கீர்த்தன இருக்கைகளையும் தயாரித்திருந்தனர். பல மணிநேரம் செலவழித்து பாடல்களையும் பழகி வைத்திருந்தனர். இந்த இளம் கைதிகள் சந்திப்பு, பாவமன்னிப்பு திருவழிபாடாக அமைந்திருந்தது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐந்து கைதிகளுக்கு, ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றினார். திருத்தந்தையிடம் இந்த அருளடையாளத்தைப் பெற்ற கைதிகளில் ஒருவரான, 21 வயது நிரம்பிய, லூயிஸ் ஆஸ்கர் மார்ட்டினெஸ் என்பவர், அதற்குப் பின்னர் கட்டுப்படுத்த முடியாமல் தேம்பித் தேம்பி அழுதார். நான் அனுபவிக்கும் அக சுதந்திரத்தைச் சொற்களால் வர்ணிக்க முடியாது என்றார், ஆஸ்கர் மார்ட்டினெஸ். குறிப்பிட்டுச் சொல்ல முடியாத குற்றத்தால், என் குடும்பத்தைவிட்டுப் பிரிந்துள்ளேன், எனது அன்பு நண்பருக்கும், எனக்கும் ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்திவிட்டேன், தண்டனை முடிந்து வெளியே சென்று, குளிர்சாதனப்பெட்டி தொழிலாளராக விரும்புகிறேன், இது எனது தாய்க்கு மகிழ்ச்சி அளிக்கும் என, இந்த திருவழிபாடு தொடங்குகையில், மார்ட்டினெஸ், திருத்தந்தையிடம் தெரிவித்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், மாற்றம், மனமாற்றம், உற்சாகப்படுத்தல் ஆகிய தலைப்புகளில், இந்தக் கைதிகளுக்கு மறையுரையாற்றினார். நல்லவர்கள், தீயவர்கள், நேர்மையாளர், பாவிகள் என சமுதாயம் முத்திரை குத்துகிறது, மாறாக, மக்கள் மாறுவதற்கு சமுதாயம் இடமளிக்க வேண்டுமென, திருத்தந்தை கேட்டுக்கொண்டார். இளையோர் சிறையில் சந்திப்பை முடித்து, இராணுவ ஹெலிகாப்டரில் ஏறி, Pacora விலிருந்து, பானமா நகர் சென்ற திருத்தந்தை, திருப்பீட தூதரகத்தில் மதிய உணவருந்தி ஓய்வும் எடுத்துக்கொண்டார். 

26 January 2019, 14:41