பானமா அரசுத்தலைவரும் அவரது துணைவியாரும் திருத்தந்தையை அரசுத்தலைவர் இல்லத்தில் வரவேற்றபோது... பானமா அரசுத்தலைவரும் அவரது துணைவியாரும் திருத்தந்தையை அரசுத்தலைவர் இல்லத்தில் வரவேற்றபோது... 

பானமா அரசுத்தலைவர் சந்திப்பு

clicktopray செயலி வழியாக, எல்லாரும் இணைந்து, அமைதிக்காக செபமாலை செபிக்குமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்

மேரி தெரேசா – வத்திக்கான்

“உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் நாம் ஒருவரையொருவர் சந்திப்பதற்கு நம்மை உந்தித்தள்ளுவது எது? உண்மையில், நாம் ஓர் ஆழமான அன்பால் அன்புகூரப்பட்டுள்ளோம், அதே வழியில் பதில் அளிப்பதற்குச் சவால்விடுக்கும் அந்த அன்பை செயல்படுத்தாமல் நம்மால் இருக்க முடியாது, அவ்வாறு நாம் விரும்பவும் முடியாது”. மத்திய அமெரிக்க நாடான பானமாவில், தனது 26வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த நாட்டில் நடைபெற்றுவரும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, நாம் அனைவரும் ஒருவர் ஒருவரை அன்புகூர தனது டுவிட்டரில், சனவரி 24, இவ்வியாழன் மாலையில் அழைப்பு விடுத்துள்ளார். clicktopray செயலி வழியாக, எல்லாரும் இணைந்து, அமைதிக்காக செபமாலை செபிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். பானமா திருத்தூதுப் பயண நிகழ்வுகள், முழுவீச்சுடன் துவங்கப்பட்ட இவ்வியாழனன்று, அன்புகூரவும், அமைதிக்காகச் செபிக்கவும் அழைப்பு விடுத்த திருத்தந்தை, முதல் நிகழ்வாக, இவ்வியாழன், உள்ளூர் நேரம் காலை 9.45 மணிக்கு, அதாவது இந்திய நேரம் வியாழன் இரவு 8.15 மணிக்கு, பானமா நகர் திருப்பீட தூதரகத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பானமா அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்றார். Las Garzas எனப்படும், வெண்மைநிற அரசுத்தலைவர் மாளிகையில், அரசுத்தலைவரைச் சந்தித்துப் பேசினார், திருத்தந்தை. அரசுத்தலைவர் Juan Carlos Varela RodrÍguez அவர்கள், திருத்தந்தையை வரவேற்று, தனது குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி, நினைவுப் பரிசுப்பொருளையும் திருத்தந்தைக்கு அளித்தார். திருத்தந்தையும், அன்னை மரியா குழந்தை இயேசுவைக் கையில் தாங்கியிருக்கும் அழகான படத்தை, நினைவுப் பரிசாக,  அரசுத்தலைவருக்கு அளித்தார். அதன் பின்னர், அங்கிருந்து 200 மீட்டர் தூரத்திலுள்ள பொலிவார் மாளிகைக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2019, 14:53