தேடுதல்

பானமாவிலிருந்து உரோம் நகருக்குத் திரும்பிவந்த விமானப்பயணத்தில் செய்தியாளர்களுடன் பேசும் திருத்தந்தை பானமாவிலிருந்து உரோம் நகருக்குத் திரும்பிவந்த விமானப்பயணத்தில் செய்தியாளர்களுடன் பேசும் திருத்தந்தை 

விமானப் பயணத்தில் செய்தியாளர்களுடன் திருத்தந்தை

கருக்கலைத்தல், சிறியோர் பாதுகாப்பு குறித்து வத்திக்கானில் நடைபெறவிருக்கும் கூட்டம், வெனிசுவேலாவில் இடம்பெறும் நெருக்கடி நிலை உட்பட பத்திரிக்கையாளர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு திருத்தந்தை பதில் அளித்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பானமா நகரில் உலக இளையோர் நாள் நிகழ்வுகளை நிறைவு செய்து, உரோம் நகர் நோக்கி விமானத்தில் பயணம் செய்த வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்தியாளர்களுடன் 50 நிமிடங்கள் ஒரு சந்திப்பை மேற்கொண்டார். கருக்கலைத்தல், சிறியோர் பாதுகாப்பு குறித்து, பிப்ரவரி மாதம் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் கூட்டம், வெனிசுவேலாவில் இடம்பெறும் நெருக்கடி நிலை உட்பட பத்திரிக்கையாளர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு திருத்தந்தை பதில் அளித்தார்.

கருக்கலைத்தல் பிரச்சனையை முழுவதுமாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், தங்களுக்குள் உருவாகி, ஆனால், பிறப்பதற்கு அனுமதி மறுக்கப்படும் உயிருடன் ஒப்புரவாக, அன்னையருக்கு முதலில் உதவவேண்டும் என்பதை திருத்தந்தை தெளிவுபடுத்தினார். திருஅவையின் பொறுப்பாளர்களால் தவறான முறையில் நடத்தப்பட்ட சிறியோரின் பக்கம் ஒவ்வொருவரும் நின்று, அவர்கள் அடைந்துள்ள பாதிப்புக்கள் குறித்து அக்கறை கொள்ள முன்வரவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார். வெனிசுவேலாவைப் பொருத்தவரை, இரத்தம் சிந்தலைத் தவிர்க்கும் அமைதித் தீர்வு ஒன்று அங்கு தேவைப்படுகிறது என்பதை, திருத்தந்தை வலியுறுத்தினார்.

பானமா நாட்டில் தான் மேற்கொண்ட திருப்பயணம் உணர்வுபூர்வமாக இருந்ததாகக் கூறியத் திருத்தந்தை, விமான நிலையத்தில் அரசுத்தலைவருக்கு நன்றி சொல்லி விடைபெற்றபோது, அங்கு நிகழ்ந்ததை, சிறப்பாக செய்தியாளர்களிடம் நினைவுகூர்ந்தார். ஐந்து வயது நிறைந்த ஒரு கறுப்பின சிறுவனை, அரசு அதிகாரிகள், தன்னிடம் அழைத்து வந்து, அச்சிறுவன், தன் தாயுடன், கொலம்பியா நாட்டு எல்லையைக் கடக்க முயன்றபோது, அவன் தாய் இறந்துவிட்டதாக, அவ்வதிகாரிகள், தன்னிடம் கூறியதாகவும், அச்சிறுவனுக்கு, அவனது பூர்வீக இன மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாத நிலையில், அவனை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், சுட்டிக்காட்டினார். இந்த சிறுவன் நம் இதயத்தையும் உணர்வையும் தொட்டுள்ளான், அவன் மீது அக்கறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது, என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதேபோல், தங்கள் அணுகுமுறைகளில், சிரம், இதயம், உதவும் கரம், என்ற மூன்று மொழிகளில் இளையோர் செயல்படவேண்டும் என தான் தொடர்ந்து விண்ணப்பித்து வருவதாகக் கூறினார்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நிகழும், இளம் வயதில் கருவுறுதல் என்ற பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று திருத்தந்தையிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, பாலுறவு குறித்த சரியான கல்வி, கல்விக்கூடங்களில் வழங்கப்படவேண்டும் என்று தான் நம்புவதாகவும், இக்கல்வி, முதலில் குடும்பங்களில் இருந்து துவங்கவேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் பதிலளித்தார்.

இன்றைய இளையோர் திருஅவையிலிருந்து ஒதுங்கியிருக்க விழைவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்தபோது, பல காரணங்கள் இருந்தாலும், கிறிஸ்தவர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்களிடையே சாட்சிய வாழ்வு இல்லாமல் போனதே முக்கியமான காரணம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதில் சொன்னார். அத்துடன், மேய்ப்பர்கள், மக்களுக்கு அருகில் இருக்கவேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

கீழை வழிபாட்டு முறை கிறிஸ்தவ சபைகளில், திருமணமானவர்கள், அருள்பணியாளர்களாக அருள்பொழிவு பெறுவதுபோல், இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்கத் திருஅவையிலும் நிகழுமா என்ற கேள்விக்கு, அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை என்று பதிலளித்தத் திருத்தந்தை, யாரும் எளிதில் செல்லமுடியாத பசிபிக் தீவுகள் போன்ற தூர நாடுகளில், மேய்ப்புப்பணி தேவைகளைக் கருத்தில்கொண்டு, இத்தகைய வழிமுறை சிந்திக்கப்படலாம், ஆனால், அதுவும் ஆழ்ந்த ஆய்வுகளுக்கு உட்பட்டது என்று கூறினார்.

குடியேற்றதாரர் பிரச்சனை, குறிப்பாக, இத்தாலிய அரசின் புலம்பெயந்தோர் எதிர்ப்பு குறித்து கேள்வி எழுந்தபோது, அரசை வழிநடத்துவோர், அதிக கவனத்துடன் செயல்படவேண்டும், இதற்கு, 1970களில் புலம்பெயர்ந்தோரை வரவேற்று, தங்கள் நாட்டில் குடியமர்த்திய சுவீடன் நாடு ஓர் எடுத்துக்காட்டாக உதவும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்தும் பானமா நாட்டிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்று உள்ளது, வாழ்வில் முக்கியமானது எது என்பதே, அந்தப் பாடம் என்று திருத்தந்தை, செய்தியாளர்கள் கூட்டத்தின் இறுதியில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2019, 16:04