தேடுதல்

Vatican News
பானமா அரசுத்தலைவர் திருத்தந்தைக்கு வழங்கிய வரவேற்புரை பானமா அரசுத்தலைவர் திருத்தந்தைக்கு வழங்கிய வரவேற்புரை  (ANSA)

பொலிவார் மாளிகையில் திருத்தந்தை பிரான்சிஸ்

பானமா நாடு, பெருங்கடல்களும், இயற்கையான நிலமும் சந்திக்கும் பாலமாக அமைந்துள்ளது

மேரி தெரேசா – வத்திக்கான்

பானமா நகரின் சைமன் பொலிவார் மாளிகையில் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள், திருஅவைப் பிரதிநிதிகள், பல்சமயப்  பிரதிநிதிகள் என, ஏறத்தாழ 700 பேர் அமர்ந்திருந்தனர். முதலில் அரசுத்தலைவர் Varela RodrÍguez அவர்கள், திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், பானமா நாட்டிற்கான தனது முதல் உரையை வழங்கினார். 

பானமா நாடு, பெருங்கடல்களும், இயற்கையான நிலமும் சந்திக்கும் பாலமாக அமைந்துள்ளது, அமெரிக்க கண்டத்திலேயே மிகவும் குறுகலான நாடாகிய பானமா, நிலையான பிணைப்புகளையும், கூட்டமைப்புகளையும் உருவாக்குவதற்கு சக்தியைக் கொண்டுள்ளதன் அடையாளமாக உள்ளது என்று சொல்லி, அங்கு அமர்ந்திருந்தோரை ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சந்திப்பு நடைபெற்ற பொலிவார் மாளிகை, ஒரு காலத்தில் பிரான்சிஸ்கன் சபையினரின் இல்லமாக இருந்தது. 1673ம் ஆண்டில் கட்டப்பட்ட இவ்விடம், 2003ம் ஆண்டிலிருந்து பானமாவின் வெளியுறவுத் துறை அமைச்சகமாகச் செயல்பட்டு வருகின்றது. 1783ம் ஆண்டில் வெனெசுவேலா நாட்டில் பிறந்த சைமன் பொலிவார் என்பவர், இலத்தீன் அமெரிக்காவில் இஸ்பானிய காலனி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியவர். விடுதலையாளர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொலிவார் மாளிகையில், பானமா நாட்டின் முக்கிய தலைவர்கள் சந்திப்பை நிறைவுசெய்தவேளையில், சிறார் பாடகர் குழு இன்னிசையை முழங்கிக்கொண்டிருந்தது. அரசுத்தலைவரும், உதவி அரசுத்தலைவரும், தங்கள் துணைவியார்களுடன் வாசல்வரை வந்து திருத்தந்தைக்கு நன்றி சொல்லி வழியனுப்பி வைத்தனர். பின்னர், பொலிவார் மாளிகையிலிருந்து இருபது மீட்டர் தூரத்திலுள்ள புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்திற்கு நடந்து சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 

25 January 2019, 15:00