தேடுதல்

Vatican News
சனவரி 28, ஞாயிறன்று, பிலிப்பீன்ஸ் நாட்டில் தாக்குதல் இடம்பெற்ற ஜோலோ புனித கார்மேல் அன்னை பேராலயம் சனவரி 28, ஞாயிறன்று, பிலிப்பீன்ஸ் நாட்டில் தாக்குதல் இடம்பெற்ற ஜோலோ புனித கார்மேல் அன்னை பேராலயம்  (AFP or licensors)

பிலிப்பீன்ஸ் பேராலய குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம்

பயங்கரவாத வன்முறையை நடத்தியவர்கள் மனம் மாறவும், இத்தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு, அமைதியான நல்லிணக்க வாழ்வு கிடைக்கவும் ஆண்டவரிடம் மன்றாடுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பானமாவில் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், பிலிப்பீன்ஸ், கொலம்பியா நாடுகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த கண்டனங்களையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். பிலிப்பீன்ஸ் நாட்டில் ஜோலோ புனித கார்மேல் அன்னை பேராலயத்தில் இஞ்ஞாயிறன்று நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்த கவலையையும் திருத்தந்தை வெளியிட்டார். திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்த சமயத்தில் இந்தப் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இந்த வன்முறையை நடத்தியவர்கள் மனம் மாறவும், அப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு, அமைதியான நல்லிணக்க வாழ்வு கிடைக்கவும் ஆண்டவரிடம் மன்றாடினார் திருத்தந்தை. இத்தாக்குதல், கிறிஸ்தவ சமுதாயத்திற்கு புதிய கண்ணீரையும் வேதனையையும் வருவித்துள்ளது, இதில் இறந்த இருபது பேரை கிறிஸ்து மற்றும் அன்னை மரியாவிடம் அர்ப்பணிப்பதாகவும் திருத்தந்தை கூறினார். முஸ்லிம் தீவிரவாதிகள் செயல்படும் ஜோலோ தீவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையும் இத்தாக்குதலுக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கொலம்பிய கார் குண்டு வெடிப்பு

கொலம்பியாவின் பொகோட்டாவில், சனவரி 17ம் தேதி தேசிய காவல்துறை பள்ளி கார் குண்டு வெடிப்பால் தாக்கப்பட்டதில் 21 இளம் காவல்துறை பயிற்சி மாணவர்கள் இறந்தனர். இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், இந்த இளம் மாணவர்கள் பெயர்களை வாசித்த திருத்தந்தை, இவர்கள் பயங்கரவாதிகளின் வெறுப்புணர்வால் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள், உலக இளையோர் நாள் நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பாரக்க முடியாத அல்லது வானொலி வழியாக கேட்க முடியாதவர்கள். இராணுவ அமைப்பிற்கு எதிராக நடத்தப்பட்ட இத்தாக்குதலை நடத்தியதாக, அந்நாட்டு தேசிய விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது.

வெனேசுவேலா பிரச்சனை

அடுத்து வெனேசுவேலா நாட்டில் இடம்பெறும் பிரச்சனைகள் பற்றியும் கவலையுடன், மூவேளை செப உரையின் இறுதியில் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் இடம்பெறும் பிரச்சனைகள் களையப்பட, அனைத்து மக்களின் மனித உரிமைகள் மதிக்கப்பட்டு, பொதுநலனில் மட்டும் அக்கறை காட்டும் விதமாக, நீதியும் அமைதியும் நிறைந்த தீர்வு காணப்படுமாறு அழைப்பு விடுத்தார்.

இச்செப உரையின் இறுதியில், பானமா நாட்டிற்கு நன்றி சொல்லி, கடவுள் எல்லாரையும் ஆசிர்வதிப்பாராக, எனக்காகச் செபியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

28 January 2019, 16:13