தேடுதல்

பானமா அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் உரை வழங்குதல் பானமா அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் உரை வழங்குதல் 

பானமா அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தையின் உரை

இளையோரின் கனவுகளை வரவேற்பதன் வழியே, பானமா நாடு, கனவுகளின் நாடாக மீண்டும் ஒருமுறை மாறுகிறது – திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அரசுத்தலைவரே, அதிகாரிகளே, பெண்மணிகளே, பெரியோரே, பல கலாச்சாரங்களையும், இனங்களையும் ஒருங்கிணைத்து, ஒரு நாட்டை உருவாக்க, Simón Bolívar போன்ற தலைவர்கள் கனவு கண்ட வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில், நான் என் திருப்பயணத்தைத் துவக்குகிறேன். இன்று, இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள ஆயிரக்கணக்கான இளையோர், அவர்களுடன், நம்பிக்கையையும், ஆவலையும் கொணர்ந்துள்ளனர்.

பானமா நாடு, இரு பெருங்கடல்களுக்கிடையே, மிகக் குறுகியப் பாலமாக அமைந்துள்ளது. அமெரிக்கக் கண்டத்திலேயே, மிகக் குறுகிய நாடு இந்நாடு. இங்குள்ள மக்களோ, பரந்த உள்ளம் கொண்டவர்கள்.

பலரும் பயணிக்கும், சந்திக்கும் பாலம்போல அமைந்துள்ள இந்நாட்டில் வாழும் அனைவரும், இந்நாட்டைக் கட்டியெழுப்புவதில் பங்கு பெறுகின்றனர். இந்நாட்டில் வாழும் மண்ணின் மைந்தர்களான bribri, bugle, emberá, kuna, nasoteribe, ngäbe மற்றும் waunana ஆகியோரின் செறிவுமிகு கலாச்சாரங்களால், இந்நாடு அடையாளப்படுத்தப்படுகிறது.

பெரியோர், குறிப்பாக, அதிகாரத்தில் இருப்போர், தங்கள் தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் மாண்பையும், பொறுப்பையும் கட்டிக்காக்க வேண்டுமென்று இளைய தலைமுறையினர் கேட்கின்றனர்.

கிறிஸ்தவர்கள் என்று தங்களையே அழைத்துக்கொள்பவர்களில் துவங்கி, அனைவரிடமும், நேர்மையும், நீதியும் விளங்கவேண்டும், சுரண்டல்களின் பல வடிவங்கள் ஒழியவேண்டும் என்று இளையோர் எதிர்பார்க்கின்றனர்.

வர்த்தகத்திற்கும், மக்கள் நடமாட்டத்திற்கும் புகழ்பெற்ற பானமா நாடு, இந்நாள்களில் நம்பிக்கையின் மையமாகவும் திகழ்கிறது. ஐந்து கண்டங்களிலிருந்தும் இங்கு வந்துள்ள இளையோர்; கனவுகளும், நம்பிக்கைகளும் தங்கள் உள்ளங்களில் நிறைந்து வழியும் இளையோர், இங்கு கூடியுள்ளனர்.

மனிதாபிமானம் மிக்கதோர் உலகை உருவாக்கும் கனவுடன் இளையோர் இங்கு ஒருவர் ஒருவரைச் சந்திக்க வந்துள்ளனர். இவ்விளையோரின் கனவுகளை வரவேற்பதன் வழியே, பானமா நாடு, கனவுகளின் நாடாக மீண்டும் ஒருமுறை மாறுகிறது.

மற்றொரு உலகம் சாத்தியமானது! இதை நாம் அறிவோம். இவ்வுலகை கட்டியெழுப்ப நம்மால் இயன்றதைச் செய்யவேண்டும் என்று, இளையோர் நம்மை உந்தித் தள்ளுகின்றனர். எதிர்காலம் குறித்த உரிமையும், மனித உரிமையே!

இத்தகைய ஒரு சூழலில், Ricardo Miró அவர்களின் பாடல் வரிகள் உயிர் பெறுகின்றன: "என் தாயகமே, உன்னைக் காணும்போது, கடவுளின் சித்தப்படி நீ உருவாக்கப்பட்டாய் என்று மக்கள் சொல்வார்கள். உன்மீது ஒளிவீசும் ஆதவனின் ஒளியில், மனிதகுலம் அனைத்தும் இணைந்துவர முடியும்".

அந்திகுவா அன்னை மரியா, பானமா நாட்டை ஆசீர்வதித்து, பாதுகாப்பாராக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2019, 11:57