தேடுதல்

ஜப்பான் கத்தோலிக்க கோவில் (UNESCO பாரம்பரிய சொத்து) ஜப்பான் கத்தோலிக்க கோவில் (UNESCO பாரம்பரிய சொத்து) 

அணு ஆயுதங்களுக்கு எதிரான அறிக்கை வெளியிடுமாறு...

1981ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் ஜப்பானுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற நவம்பரில் ஜப்பானில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களிலிருந்து, அணு ஆயுதங்களுக்கு எதிரான அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு, ஜப்பான் கத்தோலிக்கர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக, பானமாவிற்குச் சென்ற விமானப் பயணத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற நவம்பரில் ஜப்பானுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக, பத்திரிகையாளர்களிடம் கூறியதையடுத்து, ஜப்பான் கத்தோலிக்கர், இவ்வாறு திருத்தந்தையைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

1945ம் ஆண்டில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் அணு குண்டுகளால் தாக்கப்பட்டதில், ஏறத்தாழ இரண்டு இலட்சத்து இருபதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஜப்பான் திருத்தூதுப் பயணத்தில், இவ்விரு நகரங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களை நினைவுகூர்ந்து செபிப்பார் எனச் சொல்லப்பட்டுள்ளது. 

1981ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் ஜப்பானுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட பின்னர், வருகிற நவம்பரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் ஜப்பானில் ஏறத்தாழ 4,50,000 கத்தோலிக்கர் உள்ளனர்.  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு சபை அருள்பணியாளராக, ஜப்பானில் மறைப்பணியாற்ற விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. (AsiaNews/Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 January 2019, 15:28