தேடுதல்

புதன் மறைக்கல்வியுரையின்போது  திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வியுரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் 

விசுவாசத்தின் கூறுபடாத்தன்மையை ஊக்குவிக்க ஆசிய திருஅவைக்கு......

தாய்லாந்தில் கூட்டம் நடத்தும், ஆசிய ஆயர் பேரவைகளின் விசுவாசக்கோட்பாட்டு அவைகளின் தலைவர்களுக்கு திருத்தந்தை செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருப்பீட விசுவாசக்கோட்பாட்டு பேராய பிரதிநிதிகள் குழுவும், ஆசிய ஆயர் பேரவைகளின் விசுவாசக்கோட்பாட்டு பணிக்குழுக்களின் தலைவர்களும், தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில், சனவரி 15, இச்செவ்வாயன்று துவங்கியுள்ள கூட்டத்திற்கு வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்,  திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்க விசுவாசத்தின் ஒன்றிப்பையும், கூறுபடாநிலையையும் காப்பதற்கு, நமக்குள்ள பொதுவான பொறுப்புணர்வை மீண்டும் வலியுறுத்தும் நோக்கத்தில், பல்வேறு சமய, மொழி மற்றும் கலாச்சாரங்களைக் கொண்டிருக்கும், பெரிய மற்றும், பன்முகக் கண்டமாகிய ஆசியாவில், இக்கூட்டம் நடைபெறுகின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை, இதில் கலந்துகொள்வோருக்கு தனது ஆசிரையும், செபங்களையும் தெரிவித்துள்ளார்.

இக்கால உலகின் சவால்களுக்கு மத்தியில், நற்செய்திக்குச் சான்று பகரும் புதிய வழிகள் மற்றும் புதிய சாதனங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் இக்கூட்டம் நடைபெறுகின்றது என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தியின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலில், நற்செய்தியை அறிவிக்கச் செல்லுங்கள் என, அகிலத் திருஅவைக்கும் தான் அழைப்பு விடுத்திருப்பதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, விசுவாசக்கோட்பாட்டு பேராயத்துடனும், ஆசிய ஆயர்களின் செயலூக்கமுள்ள ஒத்துழைப்பை ஊக்குவித்து, உடன்பிறப்பு உணர்வுகளைப் பரிமாறிக்கொள்வதற்கென இக்கூட்டம் நடத்தப்படுவது குறித்த பாராட்டுக்களையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவுக்கு மிகவும் தேவைப்படுகின்ற இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் சில கூறுகளை வழங்குவதற்கு, இக்கூட்டம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும், திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.   

பாங்காக் Baan Phu Waan மேய்ப்புப்பணி மையத்தில், விசுவாசக்கோட்பாட்டு பேராயத் தலைவர் கர்தினால் லூயில் லதாரியா, அதன் இணைச்செயலர் பேராயர் அகுஸ்தின் தி நோய்யா ஆகியோருக்கும், ஆசிய ஆயர் பேரவைகளின் விசுவாச கோட்பாட்டு பணிக்குழுக்களின் தலைவர்களுக்கும் இடையே ஆரம்பித்துள்ள இக்கூட்டம்,  சனவரி 18ம் தேதி நிறைவடையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2019, 15:08