ருமேனியா திருத்தூதுப்பயணத்தின் விருதுவாக்கான, “ஒன்றிணைந்து பயணிப்போம்” என்ற சொற்களுடன்  இலச்சினை ருமேனியா திருத்தூதுப்பயணத்தின் விருதுவாக்கான, “ஒன்றிணைந்து பயணிப்போம்” என்ற சொற்களுடன் இலச்சினை 

ருமேனியத் திருத்தூதுப்பயணம் மே 31-ஜூன் 2, 2019

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “கடவுளின் அன்னையின் தோட்டம்” என அழைக்கப்படும் ருமேனியாவில், 2019ம் ஆண்டு மே 31ம் தேதி முதல், ஜூன் 2ம் தேதி வரை திருத்தூதுப்பயணம் மேற்கொள்கிறார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

நான் பாவி என்ற உணர்வில், தாழ்ச்சியுடன் செபிக்க வேண்டியதன் அவசியம் குறித்து,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 11, இவ்வெள்ளியன்று பதிவு செய்துள்ள தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

“இறைத்தந்தையிடம் தாழ்ச்சியுடன் சென்று, என்னை கண்ணோக்கும், நான் பாவி என்று சொல்வது, செபத்திற்கு முதல் படியாகும். ஆண்டவர் அச்செபத்திற்கு செவிசாய்க்கிறார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், ருமேனியா நாட்டு அரசுத்தலைவர் மற்றும் அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவையின் அழைப்பை ஏற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற மே 31ம் தேதி முதல், ஜூன் 2ம் தேதி வரை, அந்நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வார் என்று, திருப்பீடம் இவ்வெள்ளியன்று அறிவித்தது.

இத்தகவலை வெளியிட்ட, திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் இடைக்கால இயக்குனர் அலெசாந்த்ரோ ஜிசோத்தி (Alessandro Gisotti) அவர்கள், ருமேனியாவில், Bucarest, Iaşi, Blaj ஆகிய நகரங்களிலும், Șumuleu Ciuc அன்னை மரியா திருத்தலத்திலும், திருத்தந்தையின் திருத்தூதுப்பயண நிகழ்வுகள் இடம்பெறும் என அறிவித்தார்.

ருமேனியா நாட்டுத் திருத்தூதுப்பயணத்தின் விருதுவாக்காக, “ஒன்றிணைந்து பயணிப்போம் (Să mergem împreună)” என்ற சொற்களும், இலச்சினையும் வெளியிடப்பட்டுள்ளன.

“கடவுளின் அன்னையின் தோட்டம்” என அழைக்கப்படும் ருமேனியாவின் அனைத்து மக்களும், அன்னை மரியின் பாதுகாவலில் துணிச்சலுடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு விடுக்கும் அழைப்பாக, இத்திருத்தூதுப்பயணத்தின் இலச்சினை அமைந்துள்ளது. ருமேனியா நாட்டு கொடியின் நீலம், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் இந்த இலச்சினை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 January 2019, 14:32