தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் சிலே ஆயர்கள் திருத்தந்தையுடன் சிலே ஆயர்கள்  (ANSA)

தூய ஆவியாரின் செயல்பாடுகள் சுதந்திரமானவை

"இறைவனின் ஆவியானவர், நம் உணர்வுகள், எண்ணங்கள் வழியே சுதந்திரமாகப் பேசுகிறார். ஆவியானவரை நம் அறிவுக்குள் அடக்கிவிடாமல், உள்ளங்களால் வரவேற்க வேண்டும்"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தூய ஆவியாரின் செயல்பாடுகள் சுதந்திரமானவை என்ற கருத்தையும், அவரை நம் அறிவுத்திறனால் கட்டிப்போட இயலாது என்பதையும் வலியுறுத்தும் வண்ணம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 16, இப்புதனன்று ஒரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"இறைவனின் ஆவியானவர், ஒவ்வொருவரின் உணர்வுகள், எண்ணங்கள் வழியே சுதந்திரமாகப் பேசுகிறார். ஆவியானவரை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியாது, மாறாக, அவரை நம் உள்ளங்களால் வரவேற்க வேண்டும்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மேலும், சிலே நாட்டு ஆயர் பேரவையின் பிரதிநிதிகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று மாலை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார் என்று, அந்நாட்டு ஆயர் பேரவையின் செயலர், ஆயர் லூயிஸ் பெர்னாண்டோ ரமோஸ் பெரெஸ் அவர்கள் வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறினார்.

பாலியல் முறையில் நிகழ்ந்த தவறுகளையடுத்து, சிலே நாட்டுத் தலத்திருஅவையில் நிலவிய பிரச்சனைகளைக் குறித்து பேச, அந்நாட்டு ஆயர்கள் அனைவரும், சென்ற ஆண்டு மே மாதம் திருத்தந்தையைச் சந்திக்க வத்திக்கானுக்கு வந்திருந்தனர்.

இந்தச் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை சிலே தலத்திருஅவை எவ்வாறு செயல்படுத்தியுள்ளது என்பதை ஆயர் பேரவையின் பிரதிநிதிகள் திருத்தந்தையிடம் கூறினர் என்றும், திருத்தந்தை தங்களுக்கு வழங்கிய ஆலோசனைகள் உதவியாக இருந்தன என்றும் ஆயர் பெரெஸ் அவர்கள் கூறினார்.

மேலும், பாலியல் முறையில் நிகழ்ந்த தவறுகளைத் தடுக்க, இவ்வாண்டு பிப்ரவரியில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் கூட்டம், திருஅவையின் நம்பகத்தன்மையை வளர்ப்பதற்கு எடுக்கப்படும் சிறந்ததொரு வழி என்று, இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் ஆயர் பெரெஸ் அவர்கள் தன் பேட்டியில் கூறினார்.

இதற்கிடையே, வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குனர் இயேசுசபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்களை, பிப்ரவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் இந்த முக்கிய கூட்டத்தின் நிறையமர்வை வழிநடத்தும் பொறுப்பாளராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார் என்று திருப்பீட செய்தித் தொடர்புத்துறை தலைவர் அலெஸ்ஸான்த்ரோ ஜிசோத்தி அவர்கள் செய்தியாளர்களிடம் இப்புதனன்று அறிவித்தார். 

16 January 2019, 15:21