திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை 160119 திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை 160119 

மறைக்கல்வியுரை : இயேசுவின் அனுபவக் குரலின் எதிரொலி

'காணாமல்போன மகன்' என்ற உவமையில், நம் வானகத் தந்தையின் முடிவற்ற அன்பையும், இரக்கத்தையும், மன்னிப்பையும் நாம் உயிரோட்டமாய் காண்கிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உரோம் நகரில் குளிர்காலம் தீவிரமாகத் துவங்கிவிட்டது என்பதை, நேரடியாகவே உணர முடிகிறது. சூரிய வெளிச்சம் கண்ணைப் பறிக்கும் வகையில் இருந்தாலும், குளிரின் தாக்கமோ உடல் முழுவதும் உணரக் கூடியதாக இருக்கின்றது. குளிரின் காரணமாக, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலேயே திருப்பயணிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘வானகத் தந்தாய்' என்ற, இயேசு கற்பித்த செபம் குறித்த, தன் புதன் மறைக்கல்வி விளக்கத்தைத் தொடர்ந்தார்.

முதலில், புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலிலிருந்து,  'கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார்' (உரோ.8,14-16) என்ற பகுதி வாசித்தளிக்கப்பட்டபின், திருத்தந்தையின் உரை தொடர்ந்தது.

அன்பு சகோதரர் சகோதரிகளே, 'வானகத் தந்தாய்' என்ற செபம் குறித்த நம் மறைக்கல்வி உரையில், இன்று, அதன் முதல் வார்த்தையான, 'எங்கள் தந்தாய்' என்பது குறித்து நோக்குவோம். துவக்ககால கிறிஸ்தவர்கள், தூய ஆவியால் வழிநடத்தப்பட்டவர்களாக, இயேசு பயன்படுத்திய அரமேய மொழியிலுள்ள 'அப்பா' எனற வார்த்தையைப் பயன்படுத்தி செபித்தனர் என்பதற்கு, தூய பவுலின் திருமடல்கள் சான்று பகர்கின்றன (உரோ.8:15; கலாத்.4:6). இயேசு கற்பித்த இந்த செபத்தின் துவக்கத்தில், இயேசுவின் குரலின் எதிரொலியை நாம் கேட்க முடிகிறது. ஆம். செபிப்பது என்பது, தந்தையுடன்கூடிய, நெருங்கிய, அதேவேளை நம்பிக்கையுள்ள இயேசுவின் உறவில் நாமும் பங்குபெறுவது என, தம் சீடர்களுக்கு கற்பித்த இயேசுவின் குரல், இச்செபத்தின் துவக்கத்தில் எதிரொலிப்பதைக் காண்கிறோம். நம் வானகத் தந்தையின் முடிவற்ற அன்பையும், இரக்கத்தையும், மன்னிப்பையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆவல்கொண்ட இயேசு, 'காணாமல்போன மகன்' என்ற உவமையில், அதனை உயிரோட்டமாய் காண்பிக்கிறார். வானகத்தந்தையின் இந்த அன்பில், தாய்மைக்குரிய பண்பும் அடங்கியுள்ளது. இறைத்தந்தையின் பிள்ளைகளாக நாம் கிறிஸ்துவில் பெற்றுள்ள புதிய வாழ்வு, வளர்ந்து முழுமையடைவதில் வானகத்தந்தையின் அன்பு, நம்மோடு உடன் வருகிறது. நற்செய்தியின் புதிய எண்ணங்களும், கிறிஸ்தவர்களாகிய நம் செபத்தின் இதயமும், ஒருவகையில் பார்த்தால், 'அப்பா' என்ற ஒரே சொல்லில் அடங்கியுள்ளது. நம் வாழ்வின் மிக துன்பகரமான வேளைகளிலும்கூட, அச்சம் கொள்ளாமல், வானகத்தந்தையை நோக்கி நம்பிக்கையுடன் திரும்பி, இயேசு கற்பித்த 'அப்பா, எங்கள் தந்தையே' என்ற வார்த்தைகளுடன் செபிப்போம்.

இவ்வாறு, தன் இவ்வார புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 18, இவ்வெள்ளியன்று, துவங்கவிருக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2019, 15:43