தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை 020119 திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை 020119 

மறைக்கல்வி உரை : செபிப்பதற்கு இருக்கும் இரு தடைகள்

கடமைக்காக வெறும் வார்த்தைகளை செபத்தில் பயன்படுத்தாமல், இறைத்தந்தைக்குரிய பிள்ளைகளுக்குரிய உள்ளுணர்வுடன் செபிப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஜனவரி மாதத்திற்கேயுரிய குளிரை உரோம் நகர் அனுபவித்துக்கொண்டிருக்க, திருத்தந்தையின், இவ்வாண்டின் முதல் புதன் மறைக்கல்வியுரை, வத்திக்கானிலுள்ள புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலேயே இடம்பெற்றது. நவம்பர் மாத இறுதி புதனோடு, பத்துக்கட்டளைகள் குறித்த தன் மறைக்கல்வி உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் முதல் வாரத்தில்,  “எங்கள் வானகத் தந்தையே” என்ற இயேசு கற்பித்த செபம் குறித்த தொடரைத் துவக்கினார். அதற்கடுத்த வாரம் 12ம் தேதி புதனன்றும், அதன் தொடர்ச்சியை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 19ம் தேதி புதனன்று, கிறிஸ்து பிறப்பு விழா தயாரிப்புக்கள் குறித்து உரை வழங்கியதால், இப்புதனன்று,  “எங்கள் வானகத்தந்தையே” என்ற மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியை வழங்கினார். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக தொழுகைக் கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு இறைவேண்டல் செய்யும் வெளிவேடக்காரரைப்போல் அல்லாமல், மறைவான இடத்திலிருந்து செபியுங்கள்' என இயேசு தன் சீடர்களுக்குக் கூறிய அறிவுரைப் பகுதி, புனித மத்தேயு நற்செய்தியிலிருந்து முதலில் வாசிக்கப்பட, திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை தொடர்ந்தது.

அன்பு சகோதரர், சகோதரிகளே, கிறிஸ்மஸ் காலத்தின் மகிழ்வில் நாம் இன்று, இயேசு கற்பித்த செபம் குறித்த மறைக்கல்வியை மீண்டும் தொடர்வோம். பேறுபெற்றோருக்குரிய புண்ணியங்கள் குறித்துத் துவங்கும் இயேசுவின் மலைப்பொழிவில், புனித மத்தேயு நற்செய்தியில், இந்த செபத்தை இயேசு நமக்கு வழங்குகிறார். ஏழைகள், கனிவுடையோர், இரக்கமுடையோர்,மற்றும், மனத்தாழ்ச்சியுடையோர் பேறுபெற்றோர் என அறிவித்து, அவர்களை விண்ணரசுக்கு வழிகாட்டுபவர்கள்  என  கூறுகிறார்  இயேசு. சட்டம் என்பது, தனக்கேயுரிய கட்டளைகளுடன், அன்பு, மற்றும், ஒப்புரவின் நற்செய்தியில் தன் நிறைவைக் காண்கிறது. மனுவுரு எடுத்த இறைமகனாம் இயேசு, நம்மை அவர் சகோதரர், சகோதரிகளாகவும், வானக‌த்தந்தையின் புதல்வர், புதல்வியராகவும் மாற்றுகிறார். “எங்கள் வானகத் தந்தையே” என்ற செபத்தை நமக்குக் கற்றுத்தருவதற்கு முன்னர், இயேசு நம்மை நோக்கி, செபிப்பதற்கு இருக்கும் இரு தடைகள் குறித்து எச்சரிப்பதைக் காண்கிறோம். முதல் தடை, வெளிவேடம். உள்மனதில் மாற்றமும், தாழ்ச்சியும் இன்றி, வெளியுலகிற்கு செபிப்பதுபோல் காண்பிக்கும் நிலை இது. இரண்டாவதாக இருக்கும் தடை,  இறைவிருப்பத்திற்கு நம்மைத் திறக்கும் உள்ளுணர்வு இன்றி, கடமைக்காக வெறும் வார்த்தைகளை செபத்தில் பயன்படுத்துவது. இதற்கு மாறாக, நமக்கு முன்னரே நம் தேவைகளை அறிந்திருக்கும் நம் தந்தையாம் இறைவனில் முழு நம்பிக்கைகொண்ட புதல்வர் புதல்வியருக்கு உரியதாக, நம் செபம் இருக்க வேண்டும். இந்த உள்ளுணர்வுடன் நாம், இயேசு கற்பித்த செபத்தை, நம் மனதையும் இதயத்தையும் இறைத்தந்தையை நோக்கி எழுப்பிச் செபிக்க இயலும். இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளின் மறைக்கல்வி உரையில் பங்குபெற வந்திருந்த கியூபா நாட்டு சர்க்கஸ் கலைஞர்களுக்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்டார்.

மேலும், புனித ஆறாம் பவுல் அரங்கில் குழுமியிருந்த இளையோர், நோயாளர்கள், மற்றும், முதியோருக்கு தன் தனிப்பட்ட வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் ஞாயிறன்று சிறப்பிக்கவிருக்கும், திருக்காட்சி திருவிழாவைக் குறிப்பிட்டு, மூன்று ஞானியர்களைப்போல் நாமும், வானத்தை அண்ணாந்து நோக்கி, நம் வாழ்க்கைப் பாதைக்கான வழியைக் கண்டுகொள்வோம் எனக் கூறினார். பின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 January 2019, 13:00