தேடுதல்

‘Click to Pray’ இணைய பக்கத்தை துவக்கி வைத்த திருத்தந்தை ‘Click to Pray’ இணைய பக்கத்தை துவக்கி வைத்த திருத்தந்தை 

திருத்தந்தையுடன் இணைந்த செப பயணம்

விசுவாசிகள் தங்கள் செப வேண்டுதல்களை திருத்தந்தையுடன் பகிர்ந்து செபிக்க உதவும் புதிய இணையதள பக்கம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகின் நலனில் அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக, அனைத்து மக்களும் செபத்தில் தன்னுடன் இணைந்து பயணம் செய்ய உதவும் நோக்கத்துடன், புதிய இணையதள பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

‘Click to Pray’, அதாவது, ‘செபிக்க சொடுக்குங்கள்’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளப் பக்கம், செல்லிடப்பேசிக்குரிய மென்பொருளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இஸ்பானியம், ஆங்கிலம், இத்தாலியம், ஜெர்மானியம், பிரெஞ்ச், போர்த்துக்கீசியம் என ஆறு மொழிகளில் அறிமுகமாகும் இப்புதிய முயற்சியில், திருத்தந்தையின் மாத செபக்கருத்து, திருத்தந்தையின் தினசரி செப வேண்டுதல் ஆகியவைகளுடன், விசுவாசிகளின் தனிப்பட்ட செப வேண்டல்களை பகிர்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

www.clicktopray.org என்ற இந்த இணையதளப் பக்கத்தில் அமைதிக்காக செபமாலையை செபிக்கும் பிரிவும் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திங்களன்று, தன் காலை மறையுரையின் தொடர்ச்சியாக, திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், 'கிறிஸ்தவ வாழ்வுமுறை என்பது, இயேசுவின் பேறுகளைச் சார்ந்ததாகும். அதாவது, எளிய மனம், தாழ்ச்சி, துன்பத்திலும் பொறுமை காத்தல், நீதியின் மீது அன்பு, துயர்களை ஏற்றுக்கொள்ளல், மற்றவர்களை தீர்ப்பிடாதிருத்தல் போன்றவற்றைச் சார்ந்ததாகும்' என குறிப்பிட்டுள்ளார்.

இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வழங்கிய டுவிட்டர் செய்தியில், 'முடிவற்ற வாழ்வின் வாயில்படியில் நமக்கென காத்திருப்பது, நாம் எவ்வளவு சம்பாதித்தோம் என்பதல்ல, நாம் எவ்வளவுக் கொடுத்தோம் என்பதேயாகும்' என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 January 2019, 15:43