தேடுதல்

Vatican News
எகிப்து காப்டிக் சபையின் புதிய பேராலயம் எகிப்து காப்டிக் சபையின் புதிய பேராலயம்  (AFP or licensors)

காப்டிக் சபை இயேசு பிறப்பு புதிய பேராலய அர்ச்சிப்புக்கு செய்தி

காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையினர், மிகவும் கடினமான சூழல்களிலும்கூட, விசுவாசம் மற்றும் அன்புக்கு உண்மையான சான்று பகர்கின்றனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

எகிப்து நாட்டில் கெய்ரோ நகருக்கு அருகில், எழுப்பப்பட்டுள்ள இயேசு பிறப்பு புதிய பேராலய அர்ச்சிப்புக்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எகிப்து காப்டிக் கிறிஸ்தவ திருஅவையில், ஆண்டவரின் பிறப்பு பெருவிழா சிறப்பிக்கப்பட்ட சனவரி 6ம் நாள் மாலையில் நடைபெற்ற புதிய பேராலய அர்ச்சிப்புக்கென, காப்டிக் சபை திருத்தந்தை 2ம் தவத்ரோஸ் அவர்களுக்கு அனுப்பிய செய்தியில், எகிப்து, மத்திய கிழக்கு மற்றும், உலகமனைத்திற்கும், அமைதியின் இளவரசர், அமைதி மற்றும் வளமை எனும் கொடைகளை அருள்வாராக என வாழ்த்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையினர், மிகவும் கடினமான சூழல்களிலும்கூட, விசுவாசம் மற்றும் அன்புக்கு உண்மையான சான்று பகர்கின்றனர் எனவும், இச்சபையிலுள்ள மறைசாட்சிகள், இச்சபையினரின் விசுவாசத்திற்கு சக்தியளிக்கின்றனர் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

எகிப்து அரசுக்கும், அரசுத்தலைவர் Abdel Fattah al-Sisi அவர்களுக்கும், தனது சிறப்பு வாழ்த்துக்களை திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

கெய்ரோவுக்கு 45 கிலோ மீட்டர் தூரத்தில், அமைக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகத் தலைநகரில், இப்புதிய பேராலயம் கட்டப்பட்டுள்ளது. பெரிய மசூதி ஒன்றும், இங்கு கட்டப்பட்டுள்ளது.

இயேசு பிறப்பு புதிய பேராலய அர்ச்சிப்பில்,  எகிப்து அரசுத்தலைவர் உட்பட பல முக்கிய அரசு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

08 January 2019, 15:43