தேடுதல்

Vatican News
இளையோரிடையே சலேசியரின் பணி இளையோரிடையே சலேசியரின் பணி 

புனித ஜான் போஸ்கோ உயிர்ப்பு ஞாயிறு முகத்துடன் பணியாற்றியவர்

எதிர்காலம் இன்றி, சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழ்கின்ற இளையோரை அரவணைப்பவர்களாக, மகிழ்வின் நற்செய்திகளாக சலேசிய சபையினர் விளங்க வேண்டும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

சலேசிய சபையை ஆரம்பித்த புனித ஜான் போஸ்கோ அவர்கள், மலர்ந்த முகத்துடன், தெளிவான திட்டங்களைச் செயல்படுத்தியவர் மற்றும், துணிச்சலுடன் தீர்மானங்களை எடுத்தவர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சலேசிய சபை குடும்பத்தினருக்குக் கூறியுள்ளார்.

"நற்செய்தியின் மகிழ்வும் (Evangelii gaudium), தொன் போஸ்கோவும்" என்ற தலைப்பில், சலேசிய அருள்பணியாளர் அந்தோனியோ கரியெரோ அவர்கள் எழுதிய நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய இளையோருக்கு, சலேசிய சபையினர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

புனித ஜான் போஸ்கோ அவர்கள், கவலைதோய்ந்த புனித வெள்ளி முகத்துடன் பணியாற்றவில்லை, மாறாக, ஒவ்வொரு நாளும், அவர் எதிர்கொண்ட ஏராளமான வேலைகள் மற்றும் இன்னல்களுக்கு மத்தியில், எப்போதும் மகிழ்ச்சியான, உயிர்ப்பு ஞாயிறு முகத்துடன் பணியாற்றினார் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதனால், புனித ஜான் போஸ்கோவை, நற்செய்தியின் மகிழ்வை, துணிச்சலுடன் அறிவித்தார் எனக் கூறலாம் என்று கூறியத் திருத்தந்தை, இதையே, அவரின் முதல் மாணவராகிய, புனித தொமினிக் சாவியோவுக்கும் பரிந்துரைத்தார் என்றும் கூறினார்.

இளையோரும் சலேசிய சபையினரும்

புனித ஜான் போஸ்கோ, 19ம் நூற்றாண்டில், இத்தாலியின் தலைநகர் மற்றும், தொழிற்சாலை நகரமாக வளர்ந்துவந்த தூரின் நகரில், சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்துவந்த மக்கள் மத்தியில், உயரிய கிறிஸ்தவ நெறிமுறைகளை வாழ்ந்து காட்டினார், இது, எண்ணற்ற இளையோரை ஈர்த்தது என்றுரைத்த திருத்தந்தை, ஜான் போஸ்கோவின் சலேசியர்கள், இன்றைய இளையோருக்கு, எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கல்வியாளர்களாகிய சலேசிய சபையினர், எதிர்காலம் இன்றி, சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழ்கின்ற இளையோரை அரவணைப்பவர்களாகவும், வலைத்தளங்களிலும், செய்தித்தாள்களிலும் ஒவ்வொரு நாளும் வெளிவருகின்ற செய்திகள் மத்தியில், அழகான மற்றும் உண்மையான செய்திகளை வழங்குபவர்களாகவும் செயல்பட வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.

சலேசியர்கள், இயேசு கிறிஸ்துவிடமிருந்து பிறந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துபவர்கள் மற்றும் இயல்பாகவே நேர்மறை எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் மத்தியில், எளிமையான வாழ்வால், நற்செய்திக்குச் சான்றுகளாக வாழுமாறு கேட்டுக்கொண்டார்.

சனவரி 10, இவ்வியாழனன்று சலேசிய குடும்ப ஆன்மீக நாள்களை ஆரமபித்துள்ள அச்சபையினர், நற்செய்தியின் மகிழ்வு என்ற திருத்தந்தையின் திருத்தூது அறிவுரைத் தொகுப்பிலிருந்து, தங்களின் மேய்ப்புப்பணி கல்விக்கு, கருத்துக்களை எடுத்து சிந்தித்து வருகின்றனர்.

11 January 2019, 14:40