தேடுதல்

திருக்காட்சி திருவிழா மறையுரை திருக்காட்சி திருவிழா மறையுரை 

கிறிஸ்துவின் ஒளியை பிரதிபலிக்கும் நிலவாக நாம்...

நம் ஒளியில் நம்பிக்கை கொண்டு செயல்படும்போது, இயேசுவின் ஒளியை கண்டுகொள்ளத் தவறுகின்றோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இயேசுவின் பிறப்பும், பின்னர், தன் 30வது வயதில் அவர் தன்னை வெளிப்படுத்திய விதமும், எளிமையான முறையில் இடம்பெற்றன என்று, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட திருக்காட்சி திருவிழா திருப்பலி மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு பிறந்த காலத்தில் வாழ்ந்த ஏரோது போன்ற தலைவர்கள், தங்கள் ஒளியில் நம்பிக்கைக் கொண்டு, இயேசு கொணர்ந்த ஒளியை கண்டுகொள்ளத் தவறினர் என்று கூறியத் திருத்தந்தை, இறைவன் தன் ஒளியை நம் முன் வைக்கிறாரேயொழிய, நமக்குள் அதனை ஒரு நாளும் திணிப்பதில்லை என்றுரைத்தார்.

பல்வேறு வேளைகளில், நாமும், இறை ஒளிக்கும் இவ்வுலக ஒளிக்கும் வேறுபாடு தெரியாமல், குழம்பிப்போய், தவறான ஒளியைப் பின்பற்றி, சரியான வழிகளில் செல்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

உண்மை ஒளியைப் பிரதிபலிக்கும்  நிலவாக நாம் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டியதன் அவசியத்தை, இத்திருக்காட்சித் திருவிழா சுட்டிக்காட்டி நிற்கிறது என்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

கிறிஸ்து எங்கு பிறந்தார் என்பதை அறிந்திருப்பதைவிட, அவரை நேருக்கு நேர் எதிர்கொள்வதும் மூன்று ஞானியர்களைப்போல் அவரை நோக்கி பயணத்தைத் துவக்குவதும் அவசியமானவை என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2019, 15:28