தேடுதல்

கொலம்பியா தாக்குதல் கொலம்பியா தாக்குதல் 

கொலம்பிய பயங்கரவாத தாக்குதல் மனிதாபிமானமற்றது

திருத்தந்தையின் அனுதாபத் தந்திச் செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பொகோட்டா பேராயருக்கு திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாத தாக்குதல் மனிதாபிமானமற்றது, கண்மூடித்தனமானது மற்றும் படைத்தவராம் கடவுளுக்கு எதிராக இழைக்கப்பட்ட மாபெரும் குற்றம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறியுள்ளார்.

தலைநகர் பொகோட்டாவில் இடம்பெற்றுள்ள மிகக் கொடூரமான தாக்குதல், வேதனை மற்றும் கவலையை அளித்துள்ளது என்றுரைத்துள்ள திருத்தந்தை, கொலம்பிய மக்கள் எல்லாருக்கும், குறிப்பாக, இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இந்த அனுதாபத் தந்திச் செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பொகோட்டா பேராயர், கர்தினால் Ruben Salazar Gómez அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளார்.

கொலம்பிய தேசிய காவல்துறை பள்ளியில் சனவரி 18, இவ்வெள்ளியன்று நடத்தப்பட்ட   பயங்கரவாத தாக்குதலில், குறைந்தது 21 பேர் இறந்துள்ளனர் மற்றும் 68 பேர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல், 2016ம் ஆண்டில், கொலம்பிய அரசுக்கும், FARC மார்க்கீசிய புரட்சிக் குழுவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னர், அந்நாட்டில் இடம்பெற்றுள்ள கொடூரத் தாக்குதலாகும்.

புதிய பாகிஸ்தான் திருப்பீட தூதர்

கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பாகிஸ்தானுக்கான திருப்பீட புதிய தூதர் Christophe Zakhia El-Kassis அவர்களை, இச்சனிக்கிழமையன்று, ஆயராகத் திருநிலைப்படுத்தினார்.  புதிய பாகிஸ்தான் திருப்பீட தூதர், லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2019, 15:33