ஆங்லிக்கன் சபையினருடன் திருத்தந்தை ஆங்லிக்கன் சபையினருடன் திருத்தந்தை 

கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்புக்காகச் செபிப்போம்

உலக அளவில் கிறிஸ்தவ சபைகள் அனைத்தும் கடைப்பிடிக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம், 1908ல் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாரம், சனவரி 18ம் தேதி தொடங்கி, புனித பவுல் மனந்திரும்பிய விழாவான சனவரி 25ம் தேதி நிறைவடைகின்றது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் துவக்க நாளான, சனவரி 18, இவ்வெள்ளி மாலை 5.30 மணிக்கு, உரோம் புனித பவுல் பசிலிக்காவில், மாலை திருப்புகழ்மாலை வழிபாட்டை தலைமையேற்று நடத்துகின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“நீதியை, ஆம், நீதியை மட்டுமே நிலைநிறுத்து (இ.ச.16,20)” என்ற தலைப்பில், இவ்வெள்ளியன்று துவங்கியுள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்திற்குரிய செபங்களை, இந்தோனேசிய கிறிஸ்தவர்கள் தயாரித்துள்ளனர். ஏறக்குறைய 26 கோடியே 50 இலட்சம் மக்கள் வாழ்கின்ற இந்தோனேசியாவில், 86 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப்பெரிய தீவு நாடான இந்தோனேசியாவில், 1,700க்கும் அதிகமான தீவுகள் உள்ளன. இந்நாட்டில், 700க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன.

உலக அளவில் கிறிஸ்தவ சபைகள் அனைத்தும் கடைப்பிடிக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம், 1908ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாரம், புனித பேதுருவின் விசுவாச அறிக்கை விழாவான சனவரி 18ம் தேதி தொடங்கி, புனித பவுல் மனந்திரும்பிய விழாவான சனவரி 25ம் தேதி நிறைவடைகின்றது. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப்பின், புனித பேதுருவின் விசுவாச அறிக்கை விழா, கத்தோலிக்கத் திருஅவை நாள்காட்டியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. ஆயினும், இவ்விழாவை, ஆங்லிக்கன் சபை தொடர்ந்து சிறப்பிக்கின்றது.

இந்திய திருஅவை செய்தி

இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள, இந்திய ஆயர் பேரவையின் பல்சமய உரையாடல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிக்குழுவின் தலைவர் ஆயர் ஜோசப் பெரும்தோட்டம் (Joseph Perumthottam) அவர்கள், கிறிஸ்தவ சபைகளுக்குள் ஒன்றிப்பு ஏற்படுவதற்கு நாம் எல்லாரும் ஒன்றிணைந்து செபிப்போம் என்று கூறியுள்ளார்.

நாம் ஒருவர் ஒருவரை ஊக்குவிக்கும்போது, நமது ஒன்றிணைந்த சக்தி உறுதிப்படுகின்றது என்றும், இயேசு கிறிஸ்துவின் வல்லமை வழியாக, கிறிஸ்தவர்களில் உருவாகும் ஒன்றிப்பை, எந்த ஒரு சக்தியாலும் தடுத்திட முடியாது என்றும், ஆயர் ஜோசப் பெரும்தோட்டம் அவர்களின் செய்தி கூறுகின்றது.

“எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்” என்ற இயேசுவின் செபத்தைக் குறிப்பிட்டுள்ளார் ஆயர் பெரும்தோட்டம். (CBCI)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2019, 14:45