தேடுதல்

மூவேளை செப உரையைக் கேட்க கூடியிருக்கும் மக்கள் மூவேளை செப உரையைக் கேட்க கூடியிருக்கும் மக்கள் 

இயேசு ஒவ்வொரு மனிதருக்கும் ஆசீர்வாதம்

அரசியல், அரசியல் தலைவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டதல்ல, மாறாக, பொது நலனின், நகரின் வாழ்வில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

‘கடவுளின் தாய், புனித கன்னி மரியா’ விழாவான, சனவரி 01, இச்செவ்வாய் நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு, மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நம் அனைவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கிறார் என்று கூறினார்.

இன்றைய விழாத் திருப்பலியின் முதல் வாசகத்தில் கொடுக்கப்பட்டுள்ள, மரபுவழி ஆசீர்வாதம் பற்றி உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, மரியா, குழந்தை இயேசுவை தம் கரங்களில் தாங்கியிருக்கும் திருவுருவத்தை மையப்படுத்தி, தன் சிந்தனைகளை வழங்கினார்.

இவ்வாறு, மரியா, உலகின் மீட்பராம் இயேசுவை நமக்குக் காட்டுகின்றார் என்றும், அவர், ஓர் அன்னையாக, நம்மை ஆசீர்வதிக்கின்றார் என்றும், நாம் துவங்கியிருக்கும் புதிய ஆண்டில், நம் ஒவ்வொருவரின் பயணத்தை ஆசீர்வதிக்கின்றார் என்றும், திருத்தந்தை     கூறினார்.

ஆண்டவர் உங்களை ஆசீர்வதிக்கிறார், உங்களைக் காக்கின்றார், உங்கள் மீது அவரது முகம் ஒளிரச் செய்கின்றார், உங்கள் மீது அருள் பொழிகின்றார்... என, இஸ்ரேலில் குருக்கள் மக்களை ஆசீர்வதிக்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, கடவுளை, ஆண்டவர் என்பது, கடவுளின் வல்லமைமிக்க ஆசீர்வாதங்களை, அவற்றைப் பெறுகிறவர்களுக்கு அளிப்பதாகும் என்று விளக்கினார்.

இயேசு, முழு மனித சமுதாயத்திற்கும் ஆசீர்வாதமாக இருக்கின்றார், அவரே, அருளையும், இரக்கத்தையும், அமைதியையும் அபரிவிதமாகப் பொழிகிறார் என்றுரைத்த திருத்தந்தை, நல்ல அரசியல், அமைதிக்குப் பணியாற்றுவதாகும் என்ற தலைப்பில், சனவரி முதல் நாளில் உலக அமைதி நாள் சிறப்பிக்கப்படுவதையும் குறிப்பிட்டார்.

அரசியல், அரசியல் தலைவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டதல்ல, மாறாக, பொது நலனின், நகரின் வாழ்வில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது என்றும், அமைதிக்கான பணியில் ஒவ்வொருவரும் அவரவர் பங்கை ஆற்றினால், அரசியல்கூட நல்லதாக அமையும் என்று, மூவேளை செப உரையில் திருத்தந்தை கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2019, 15:08