தேடுதல்

Vatican News
ரோமன் ரோட்டா அப்போஸ்தலிக்க நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் ரோமன் ரோட்டா அப்போஸ்தலிக்க நீதிமன்றத்தின் உறுப்பினர்கள்  (ANSA)

திருமணத்திற்கு உண்மையான அன்பு அவசியம்

ரோமன் ரோட்ட நீதிமன்ற உறுப்பினர்களின் தீர்ப்புகள், திருமணச் சட்டத்தை சரியாக விளக்குவதற்கு உதவுவதாயும், தம்பதியரின் ஆன்மீக நலன் மற்றும் விசுவாசத்தை ஊக்குவிப்பதாயும் இருக்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருமணத்திற்கு, பரந்த மனப்பான்மையுடைய ஒன்றிப்பும், உண்மையான அன்பும் தேவைப்படுகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் தான் சந்தித்த, ரோமன் ரோட்டா அப்போஸ்தலிக்க நீதிமன்றத்தின் உறுப்பினர்களிடம் கூறினார்.

நீதித்துறை ஆண்டின் துவக்கமாக, ரோமன் ரோட்டா நீதிமன்றத்தின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமணம் எனும் அருளடையாளத்தில் ஒன்றிப்பு மற்றும் பிரமாணிக்கத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.

பிரமாணிக்கம் என்பது, ஒரு கொடை எனவும், இது தம்பதியர்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் இயலக்கூடியதே என்றுரைத்த திருத்தந்தை, ஒன்றிப்பு மற்றும் பிரமாணிக்கம் ஆகிய பண்புகளை, ரோமன் ரோட்டா உறுப்பினர்கள், தங்கள் பணியில் அடிக்கடி அனுபவித்து வருகின்றார்கள் என பாராட்டினார்.

தகுந்த தயாரிப்பு

பரந்த மனப்பான்மையுடைய ஒன்றிப்பு மற்றும், உண்மையான அன்பு நிறைந்த வாழ்வுக்குத் தம்பதியர் தங்களையே தயாரிப்பதற்கு, திருஅவையின் மறைப்பணியாளர்கள் உதவ வேண்டும் என்றும், இந்த தயாரிப்பு திருமணத்திற்கு நீண்ட நாள்களுக்கு முன்னரேயும், தம்பதியர் திருமண நாளை நெருங்கி வரும்போதும், அவர்களின் திருமண வாழ்வு முழுவதும் இடம்பெற வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.

திருமணத் தயாரிப்பில், திருஅவை சமுதாயத்தின் எல்லா நிலைகளும் ஈடுபடவேண்டியிருந்தாலும், இதில், தங்களின் அலுவல் மற்றும் திருப்பணியின் காரணமாக, மேய்ப்பர்கள், முக்கிய இடத்தைக் கொண்டுள்ளனர் என்றும், திருத்தந்தை கூறினார்.

புனிதர்கள் அக்குய்லா, பிரிசில்லா

புனித பவுல் அவர்களுக்கு நற்செய்திப் பணியில் உதவிய திருமணமான தம்பதியரான புனிதர்கள் அக்குய்லா மற்றும் பிரிசில்லாவின் எடுத்துக்காட்டைக் குறிப்பிட்ட திருத்தந்தை, புற இனத்தாரின் திருத்தூதரான பவுல், இவர்களை, உடன் பணியாளர்கள் எனக் குறிப்பிட்டார் என்று கூறினார். பரந்த மனப்பான்மையுடைய ஒன்றிப்பும், உண்மையான அன்பும் கொண்ட தம்பதியர், திருஅவையின் மேய்ப்புப்பணிக்குச் சிறப்பு வளங்களாக உள்ளனர் எனவும் திருத்தந்தை கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவையிலுள்ள உச்ச நீதிமன்றமான ரோமன் ரோட்டா, திருஅவை சட்டம் தொடர்புடைய, நிர்வாகம் சார்ந்திராத எந்த வழக்கையும் விசாரித்து தீர்ப்பு வழங்கினாலும், முக்கியமாக, திருமணம் சார்ந்த வழக்குகள் குறித்தே விசாரணை நடத்தி தீர்ப்பளிக்கின்றது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், தாழ்மையும் கனிவுமாகிய மனிதப் பம்புகள் பார்ப்பதற்கு எளிமையாகத் தெரிந்தாலும், அவற்றால், மிக கடினமான மோதல்களை வெற்றி காண முடியும் என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

29 January 2019, 15:24