திருத்தந்தையுடன் பேராயர் வின்சென்சோ பாலியா திருத்தந்தையுடன் பேராயர் வின்சென்சோ பாலியா 

திருப்பீட வாழ்வுக் கழகத்திற்கு திருத்தந்தை கடிதம்

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், Vitae mysterium என்ற அறிக்கையின் வழியாக, 1994ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, திருப்பீட வாழ்வுக் கழகத்தை உருவாக்கினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருப்பீட வாழ்வுக் கழகம் உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவுக்கென, அக்கழகத் தலைவர் பேராயர் வின்சென்சோ பாலியா அவர்களுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பிய,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்கழக உறுப்பினர்கள், உடன்பிறப்பு உணர்வையும், மனித வாழ்வையும் ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

“மனித சமுதாயம்” என்ற தலைப்பில், 13 தலைப்புகளில், ஒரு நீண்ட கடிதத்தை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிரியல் மருத்துவத்தில் இடம்பெற்றுவரும் அதிவேக மாற்றங்களைக் கண்டு, இந்த துறையில், சிறந்த ஓர் அமைப்புமுறை அவசியம் என உணர்ந்து, 25 ஆண்டுகளுக்கு முன்னர், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், இக்கழகத்தை உருவாக்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்

கடவுளின் அன்பு

கடவுள் உலகைப் படைப்பதற்கு முன்னரே, மனித சமுதாயம், அவரின் கனவாக இருந்தது என்றும், கடவுளின் அன்பிலும், அவரது படைப்புச் செயலிலும், நமது பொதுவான தொடக்கம் பற்றிய விழிப்புணர்வில் நாம் வளர வேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார். 

கடவுளின் பேரன்பிலிருந்து பிறந்த வாழ்வின் மனிதத்தை, இக்காலத்தில் மீண்டும் பரிந்துரைப்பதற்கு திருஅவை அழைப்பு பெற்றுள்ளது என்றுரைத்துள்ள திருத்தந்தை, திருப்பீட வாழ்வு கழகத்தின் வரலாறையும் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால நிலை

இக்காலத்தில் மனித சமுதாயம் எதிர்கொள்கின்ற கடும் தடைகள் பற்றியும், குறிப்பாக, இப்பூமியின் வரலாற்றோடும், மக்களோடும், நம் உறவில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலை

பற்றியும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, பொதுநலன்மீது அக்கறையின்றி, தன்னைப் பற்றியதில் வேரூன்றியுள்ள நிலை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

அதிவேக பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் தவிர்த்து, கசப்புநிறைந்த பிரிவினைகள் மற்றும் மோசமான பகல்கனவுகளையும் மனித சமுதாயம் உருவாக்கி வருகின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சூழலில் திருஅவை எதிர்நோக்கும் கடினமான பணிகள் பற்றியும் கூறியுள்ளார்.

திருப்பீட வாழ்வுக் கழகத்தின் வருங்காலம் பற்றியும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனுஉருஎடுத்த இறைமகனின் நற்செய்தியை, இன்றைய மனிதர்களின் அனுபவங்களில், அவர்களின் மொழியில் எடுத்துரைக்க வேண்டிய அவசியம், திருஅவைக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.  

பொதுநலனுக்குப் பணியாற்றுவதில், துணிச்சலான கலந்துரையாடல் நடத்தும் ஓர் இடமாக, திருப்பீட வாழ்வு கழகம் அமைந்திருக்கும் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு இடையே உறவுகளை ஆழமாகப் புரிந்துகொள்வதில், இக்கழகம் முக்கிய இடத்தை வகிக்கும் என்பதில் தான் உறுதியாய் இருப்பதாகவும் கூறியுள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2019, 15:24