புதன் மறைக்கல்வி உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வி உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

"உலகின் சமநிலைக்காக" கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி

கியூபா நாட்டின் ஹவானாவில், நடைபெறும் 4வது பன்னாட்டு கருத்தரங்கிற்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், மனிதருக்கும், இயற்கைக்கும் இடையே நிலவும் உறவு குறித்து வலியுறுத்தியுள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித குலத்தின் சூழலும், இயற்கையின் சுற்றுச்சூழலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது என்றும், அவற்றில் ஒன்று குறையும்போது, மற்றொன்றும் அதனுடன் சேர்ந்து குறைவுபடுகிறது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

"உலகின் சமநிலைக்காக" என்ற தலைப்பில், கியூபா நாட்டின் ஹவானாவில், சனவரி 28, இத்திங்கள் முதல், 31 இவ்வியாழன் முடிய, நடைபெறும் 4வது பன்னாட்டு கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், மனிதருக்கும் இயற்கைக்கும் இடையே நிலவும் உறவு குறித்து வலியுறுத்தியுள்ளார்.

மனித குலத்தின் உண்மையான முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட நல்மனம் கொண்ட அனைவரும் இணைந்து வந்து முயற்சிகள் மேற்கொண்டால், மனிதர்களையும், அவர்கள் வாழும் சுற்றுச்சூழலையும் முன்னேற்ற முடியும் என்று, திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தான் கியூபா நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், 'சந்திக்கும் கலாச்சாரத்தை'க்குறித்து இளையோருக்கு வழங்கிய உரையை, இச்செய்தியில் நினைவுக்கூர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டோர் சந்திப்பது மிகவும் முக்கியம் என்று எடுத்துரைத்தார்.

கியூபா நாட்டின் கவிஞராக, பேராசிரியராகத் திகழ்ந்த José Martí அவர்கள் பிறந்தநாளான சனவரி 28ம் தேதி துவங்கியுள்ள இக்கருத்தரங்கு, கியூபா நாட்டின் முன்னேற்றம் குறித்து அக்கவிஞர் கொண்டிருந்த பல்வேறு கருத்துக்களில் கவனம் செலுத்தும் என்று தான் நம்புவதாக திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.

பலன் தரும் உரையாடல் வழியே, நல்மனம் கொண்ட அனைவரும், நாட்டின், மற்றும், உலகின் முன்னேற்றத்திற்கு, வழிவகுக்க முடியும் என்று கூறிய பேராசியர் José Martí அவர்களை, புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் "ஒளியின் மனிதர்" என்று கூறியதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2019, 15:41