பல்கேரிய திருத்தூதுப்பயண இலச்சினை பல்கேரிய திருத்தூதுப்பயண இலச்சினை 

பல்கேரிய திருத்தூதுப் பயணத்திற்கு ஆன்மீக தயாரிப்பு

பல்கேரியாவில், சோபியா, ராக்கொவ்ஸ்கி ஆகிய நகரங்களிலும், மாசிடோனியாவில், புனித அன்னை தெரேசாவின் பிறந்த ஊரான ஸ்கோப்யேவிலும் திருத்தந்தை பயணங்களை மேற்கொள்வார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்கேரியா நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும்வேளை, அப்பயணத்திற்கு ஆன்மீக முறையில் நன்கு தயாரிக்குமாறு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

2019ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்கேரியா, மற்றும் மாசிடோனியா நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று, இவ்வியாழனன்று திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்தது.

இதை முன்னிட்டு மகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ள பல்கேரிய ஆயர்கள், 'உலகில் அமைதி (Pacem in Terris)' என்ற இத்திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்கைக் குறிப்பிட்டு, இப்பயணம், பல்கேரியாவின் அனைத்து மக்களுக்கும், கத்தோலிக்கருக்கும், அளப்பரிய இறையருளைக் கொணரும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளனர்.

பல்கேரியாவிலும், பல்கேரியாவின் சுற்றுப்புறத்திலும், உலகிலும், அமைதியைக் கொண்டு வருவதற்கு, திருத்தந்தையின் இப்பயணம் தூண்டுதலாக அமையும் என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.  

பல்கேரியாவில், சோபியா (Sofia) மற்றும் ராக்கொவ்ஸ்கி (Rakovski) ஆகிய நகரங்களிலும், மாசிடோனியாவில், புனித அன்னை தெரேசாவின் பிறந்த ஊரான ஸ்கோப்யேவிலும் (Skopje), திருத்தந்தை பயணங்களை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கேரியா நாட்டின் திருத்தூதுப் பயணத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இலச்சினையில், இவ்வுலகை இரு கரங்கள் தாங்கியிருப்பது போலவும், 'உலகில் அமைதி' என்ற சொற்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2018, 16:03