தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்களில் ஒன்று திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்களில் ஒன்று  (@vaticanmedia)

புனித பிரான்சிசின் அடிச்சுவட்டில் திருத்தந்தை அபு தாபி பயணம்

அபு தாபி திருத்தூதுப் பயணத்தின் மையக்கருத்து - "உமது அமைதியின் கருவியாக என்னை உருவாக்கும்"

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் அடிச்சுவட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அபு தாபி நகருக்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம், முஸ்லிம்களோடு உறவைப் பரிமாறிக்கொள்வதற்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார், தெற்கு அரேபியாவின் அப்போஸ்தலிக்க பிரதிநிதி, ஆயர் பால் ஹின்டெர்.

2019ம் ஆண்டு, பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி முடிய, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் பற்றி ஊடகங்களிடம் பகிரந்துகொண்ட ஆயர் ஹின்டெர் அவர்கள், திருத்தந்தையின் இப்பயணம், மத நம்பிக்கையாளர் அனைவருக்கும் மகிழ்வின் காலமாக அமைந்திருக்கும் என்று தெரிவித்தார்.

அரேபிய தீபகற்பத்திற்கு, ஒரு திருத்தந்தை மேற்கொள்ளும் முதல் திருத்தூதுப் பயணமாக இது அமைந்துள்ளது என்ற மகிழ்வைத் தெரிவித்த, ஆயர் ஹின்டெர் அவர்கள், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கு, இப்பயணம், மிகவும் உதவும் என்றார்.

முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் கலந்துரையாடலில், இத்திருத்தூதுப் பயணம், மேலும் ஒரு முக்கியமான முயற்சி என்றுரைத்த ஆயர் ஹின்டெர் அவர்கள், மத்திய கிழக்கில் நிலையான தன்மை உருவாகவும் உதவும் என்றார்.

இளவரசர், Sheikh Mohammed bin Zayed Al Nahyan அவர்களின் அழைப்பையும், ஐக்கிய அரபு அமீரகத்தின் கத்தோலிக்கத் திருஅவையின் அழைப்பையும் ஏற்று, திருத்தந்தை இப்பயணத்தை மேற்கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அபு தாபியில் நடைபெறும் பன்னாட்டு பலசமயக் கூட்டத்தில் கலந்துகொள்வது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக அமையும்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், அமைதி வேண்டி உருவாக்கிய புகழ்பெற்ற செபத்தின் ஒரு வரியான, "உமது அமைதியின் கருவியாக என்னை உருவாக்கும்" என்ற சொற்கள், இப்பயணத்தின் மையக்கருத்தாக வெளியிடப்பட்டுள்ளது.

08 December 2018, 15:29