மேரி மேஜர் பசிலிக்காவில் திருத்தந்தை செபிக்கிறார் மேரி மேஜர் பசிலிக்காவில் திருத்தந்தை செபிக்கிறார் 

இஸ்பானிய வளாகத்தில் அன்னை மரியிடம் திருத்தந்தை செபம்

அன்னை மரியாவின் இதயம் முழுவதும், கடவுளை மையப்படுத்தி இருந்ததே, அவரின் முழுமையான அழகுக்கு காரணம்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

அன்னை மரியா, அழகின் முழுமையாக இருப்பதன் இரகசியம் என்னவென்று, அமல அன்னை மரியாவின் திருவிழாவான, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“அன்னை மரியா, “tota pulchra” அதாவது முழுமையும் அழகாய் இருப்பதன் இரகசியம் என்னவெனில், அவரின் வெளித்தோற்றமோ அல்லது கடந்துபோகும் அழகோ அல்ல, மாறாக, அவரின் இதயம் முழுவதும், கடவுளை மையப்படுத்தி இருந்ததே என்று, தந் டுவிட்டரில் விளக்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை தன் டுவிட்டரில் எழுதியுள்ள, Tota pulchra என்ற சொற்கள், கத்தோலிக்கரின் செபத்தில், நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. மேலும், அமல அன்னை மரியாவின் திருவிழாவன்று, மாலை திருப்புகழ்மாலையில் சொல்லப்படும் திருப்பாக்களில் வருகின்ற முன்மொழிகளில் ஒன்றாகும்.

மேலும், அமல அன்னை மரியாவின் திருவிழாவான இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 3.30 மணிக்கு, உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்ற செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை 4 மணிக்கு இஸ்பானிய வளாகம் சென்றார்.

அவ்விடத்திலுள்ள அன்னை மரியா நினைவு சின்னத்தின் முன்னர், அனைவரோடும் சேர்ந்து, உரோம் நகரின் அனைத்துதரப்பு மக்களுக்காகவும்  அன்னை மரியாவிடம் செபித்த திருத்தந்தை, நோயாளர் மற்றும் ஏனையோரை ஆசிர்வதித்தார்.

இன்னும், இத்திருவிழா நாளில், நண்பகலில் ஆற்றிய மூவேளை செப உரையிலும், இஸ்பானிய வளாகம் செல்வது பற்றிக் குறிப்பிட்டு, அனைவரும் ஆன்மீக முறையில் தன்னோடு இணைந்திருக்குமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2018, 15:30