தேடுதல்

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி வெளியாகும் @pontifex பக்கம் - கோப்புப் படம் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி வெளியாகும் @pontifex பக்கம் - கோப்புப் படம் 

புனித யோவான் திருநாள் – திருத்தந்தையின் டுவிட்டர்

பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் இளையோர் உலக நாள் நிகழ்வுகளில், ஒப்புரவு அருளடையாளத்திற்கென பயன்படுத்தப்படும் 250 இருக்கைகளை, அந்நாட்டின் சிறைக்கைதிகள் உருவாக்கி வருகின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 27, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட திருத்தூதரும், நற்செய்தியாளருமான புனித யோவான் திருநாளையும், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியை பதிவு செய்தார்.

"இயேசுவைக் காணும்போது, அன்பே உருவான கடவுளின் முகத்தை நாம் காண்கிறோம், அவரை, நம் சகோதரர், சகோதரிகளின் முகங்களில் கண்டுகொள்வதற்குக் கற்றுக்கொள்கிறோம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

டிசம்பர் 27, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1,806 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 79 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேலும், 2019ம் ஆண்டு சனவரி மாதம் பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் இளையோர் உலக நாள் நிகழ்வுகளில் ஒப்புரவு அருளடையாளத்திற்கென பயன்படுத்தப்படும் 250 இருக்கைகளை, அந்நாட்டின் La Joya மற்றும் Nueva Joya என்ற இரு சிறைகளில் உள்ள 35 கைதிகள் உருவாக்கி வருகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பானமா நகரின் Omar Recreation பூங்காவில் இந்த ஒப்புரவு அருளடையாள நிகழ்வு நடைபெறுவதால், இந்தப் பூங்கா, 'மன்னிப்பு பூங்கா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 December 2018, 14:44