தேடுதல்

துப்பாக்கித் தாக்குதல் நடைபெற்ற காம்பினாஸ் பேராலயத்தில், டிசம்பர் 12, இறந்தோருக்காக திருப்பலி துப்பாக்கித் தாக்குதல் நடைபெற்ற காம்பினாஸ் பேராலயத்தில், டிசம்பர் 12, இறந்தோருக்காக திருப்பலி 

துப்பாக்கித் தாக்குதலில் இறந்தோருக்கு திருத்தந்தையின் அனுதாபம்

பிரேசில் நாட்டில், காம்பினாஸ் பேராலயத்திலும், ஸ்ட்ராஸ்பர்க் நகரில், கிறிஸ்மஸ் கடைவீதியிலும் நிகழ்ந்த துப்பாக்கித் தாக்குதல்களில் இறந்தோருக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்திகள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"நாம் தனியே செபிக்கும் வேளையிலும், இறைமக்கள் அனைவரோடும் இணைந்து செபிக்கிறோம்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று வெளியாயின.

மேலும், டிசம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட்ட குவாதலூப்பே அன்னை மரியாவின் திருநாளையொட்டி, திருத்தந்தை வழங்கிய டுவிட்டர் செய்தியில், "அமெரிக்க கண்டத்தில் வாழும் மக்களை, பாதுகாத்து, அவர்களுடன் துணையாக நடப்பதற்கு, குவாதலூப்பே அன்னை மரியாவிடம் நாம் இறைஞ்சுவோம்" என்ற சொற்களை பதிவு செய்திருந்தார்.

இதற்கிடையே, பிரேசில் நாட்டில், காம்பினாஸ் என்ற இடத்தில் பேராலயத்தில் நிகழ்ந்த துப்பாக்கித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக தன் செபத்தையும், மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு தன் அனுதாபங்களையும் வெளியிட்டு, டிசம்பர் 12, இப்புதன் மாலையில், தந்தியொன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அதேவண்ணம், பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் நடைபெற்ற தாக்குதலில் இறந்தோருக்காகவும், அவர்கள் குடும்பங்களுக்காகவும் தன் ஆழந்த வருத்தத்தையும், செபங்களையும் தெரிவிக்கும் மற்றொரு தந்தியை திருத்தந்தை அனுப்பியுள்ளார்.

காம்பினாஸ் மறைமாவட்டத்தின் பொறுப்பாளருக்கும், ஸ்ட்ராஸ்பர்க் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் லூக் இராவெல் அவர்களுக்கும், திருத்தந்தையின் பெயரால், இத்தந்திச் செய்திகளை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

காம்பினாஸ் நகரின் பேராலயத்தில், டிசம்பர் 11, செவ்வாயன்று, நண்பகல் திருப்பலி நடைபெற்ற வேளையில், 49 வயதான Euler Fernando Grandolpho என்பவர், நடத்திய துப்பாக்கித் தாக்குதலில், நால்வர் கொல்லப்பட்டனர், மற்றும் நால்வர் காயமடைந்துள்ளனர். இறுதியில், Grandolpho தன்னையே சுட்டுக்கொண்டு இறந்தார்.

தாக்குதல் நடைபெற்ற அடுத்தநாள், டிசம்பர் 12, புதனன்று, இறந்தோருக்காகவும், காயமடைந்தோருக்காகவும், அதே பேராலயத்தில் திருப்பலி நிகழ்ந்தது.

இதே டிசம்பர் 11ம் தேதி, மாலை 8 மணியளவில், பிரான்ஸ் நாட்டு ஸ்ட்ராஸ்பர்க் நகரில், கிறிஸ்மஸ் கடைவீதியில் நிகழ்ந்த துப்பாக்கித் தாக்குதலில், மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர், 12 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்டவரை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2018, 15:26