தேடுதல்

விமானத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு விமானத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு 

நேர்மையாகச் செயல்பட்ட செய்தியாளர்களுக்குப் பாராட்டு

அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கும்படிச் செய்த செய்தியாளர்களுக்கு திருத்தந்தை நன்றி

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்மஸ் குடில் மற்றும், கிறிஸ்மஸ் மரத்தின் அடையாளங்கள், குடும்ப வாழ்வில் கடவுளின் ஒளியும், கனிவும் பிரதிபலிக்க உதவட்டும் என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று இடம்பெற்றிருந்தன.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 21, இவ்வெள்ளியன்று, திருப்பீட தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஆற்றிய உரை பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்த, திருப்பீட செய்தித் தொடர்பாளர் கிரெக் புர்கே அவர்கள், திருத்தந்தை செய்தியாளர்களின் பணிகளைப் பாராட்டினார் என்று கூறியுள்ளார்.

அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள் பற்றி வெளியிடுவதில் நேர்மையாகச் செயல்பட்ட மற்றும், அவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கும்படிச் செய்த செய்தியாளர்களுக்கு, திருத்தந்தை நன்றி தெரிவித்தார் எனவும், கிரெக் புர்கே அவர்கள் கூறியுள்ளார்.

இத்தகைய குற்றங்களை திருஅவை ஒருபோதும் மூடிமறைக்காது அல்லது, இவை குறித்து நடவடிக்கை எடுக்கத் தவறாது என்று திருத்தந்தை கூறினார் எனவும், வருகிற பிப்ரவரியில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும், ‘திருஅவையில் சிறார் பாதுகாப்பு’ குறித்த கூட்டத்திற்கு, ஒருவிதத்தில் தயாரிப்பாக, பாலியல் முறைகேடுகள் பற்றி திருத்தந்தை உரையாற்றியது அமைந்திருந்தது எனவும், புர்கே அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 December 2018, 15:44