தேடுதல்

கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் குடில் நன்கொடையாளர்களுடன் திருத்தந்தை கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் குடில் நன்கொடையாளர்களுடன் திருத்தந்தை  

கிறிஸ்மஸ் மரம், குடில், கடவுளின் கனிவைத் தியானிப்பதற்கு உதவி

கிறிஸ்மஸ் குடில் மற்றும் கிறிஸ்மஸ் மரம், இயேசுவின் பிறப்புப் பெருவிழாவை வாழ்வதற்கு நம் அனைவருக்கும் உதவுகின்றன - திருத்தந்தை

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்மஸின் வியப்பூட்டும் அடையாளங்களாகிய, கிறிஸ்மஸ் மரமும், கிறிஸ்மஸ் குடிலும், நம் ஒவ்வொருவரோடும் நெருக்கமாக இருக்கும்பொருட்டு, கடவுள் மனிதராகப் பிறந்த பேருண்மையையும், அவரின் ஒளியையும், கனிவையும் தியானிப்பதற்கு உதவுகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தை அலங்கரித்து நிற்கும் கிறிஸ்மஸ் மரத்தை வழங்கியவர்கள் மற்றும், கிறிஸ்மஸ் குடிலை அமைத்தவர்கள் என, ஏறத்தாழ 350 பேரை, இவ்வெள்ளியன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து, தனது நல்வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தவேளையில், இவ்வாறு கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

விளக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்துவே உலகின் மற்றும் ஆன்மாவின் ஒளி என்பதையும், அந்த ஒளி, பகைமையின் இருளை விரட்டி, மன்னிப்புக்கு வழியமைக்கின்றது என்பதையும் உணர்த்துகின்றது என்றுரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வாண்டு வத்திக்கான் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள, இருபது மீட்டருக்கு அதிகமான உயரம் கொண்டுள்ள கிறிஸ்மஸ் மரம், தம் மகன் இயேசுவை இவ்வுலகில் பிறக்கச் செய்த கடவுள், மனிதரை, தன்னலம் மற்றும் பாவத்திலிருந்து விடுவித்து, தம்மிடம் ஈர்ப்பதன் அடையாளமாக உள்ளது என்றும், திருத்தந்தை தெரிவித்தார்.

Jesolo கடற்கரை மணலால் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடில் உருவங்கள் பற்றியும், தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, எளிமையான பொருளாகிய மண், பெத்லகேம் மாடடை குடிலில், கடவுள், தம் மகன் இயேசுவின் பிறப்பில் வெளிப்படுத்திய எளிமையையும், தாழ்மையையும் உணர்த்துகின்றது என்று கூறினார்.    

குழந்தைதன்மை பற்றியும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் எல்லாரும், கடவுள் முன்னிலையில், சுதந்திரப் பிள்ளைகளாக வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம் எனவும் கூறினார்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், டிசம்பர் 07, இவ்வெள்ளி மாலையிலிருந்து, ஒளியுடன் மிளிரவுள்ள 23 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்மஸ் மரம், இத்தாலியின் Pordenone மாநிலத்திலுள்ள, Cansiglio வனத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் மரம் வைக்கும் வழக்கம், 1982ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் தொடங்கப்பட்டது.

கிறிஸ்மஸ் குடிலில் வைக்கப்பட்டுள்ள உருவங்கள், இத்தாலியின் வெனிஸ் நகருக்கருகிலுள்ள, Jesolo கடற்கரை மணலால் ஆனவை. 700 டன்கள் மணலால் அமைக்கப்பட்டுள்ள இந்த உருவங்களை, செக் குடியரசு, ஹாலந்து, இரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்கு கலைஞர்கள் உருவாக்கினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 December 2018, 14:35