அல்ஜீரியா - மறைசாட்சியர் அருளாளராக அறிவிக்கப்படும் நிகழ்வு  அல்ஜீரியா - மறைசாட்சியர் அருளாளராக அறிவிக்கப்படும் நிகழ்வு  

19 புதிய அருளாளர்கள் குறித்து திருத்தந்தை மகிழ்ச்சி

ஹிப்போ நகர் புனித அகுஸ்தீனார் அறிவித்த அன்புச் செய்தியை, அல்ஜீரிய கத்தோலிக்க சமுதாயம் தொடர்ந்து அறிவிக்கும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

அல்ஜீரியா நாட்டில், டிசம்பர் 8, இச்சனிக்கிழமையன்று அருளாளர்களாக உயர்த்தப்பட்டுள்ள 19 மறைசாட்சிகள் பற்றி, மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறப்பு உணர்வுடனும், ஒருமைப்பாட்டுணர்வுடனும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து உலகை அமைப்பதற்கு, இந்த மறைசாட்சிகள் உந்துசக்தியாக உள்ளார்கள் என்று கூறினார்.

இந்த நம் காலத்தில், நற்செய்திக்குத் துணிச்சலுடன் சான்று பகர்ந்த இந்த மறைசாட்சிகள், தாழ்ச்சியுடன் அமைதியைக் கட்டியெழுப்பியவர்கள் மற்றும், கிறிஸ்தவப் பிறரன்புக்கு  வீரத்துடன் சான்று பகர்ந்தவர்கள் என்றுரைத்த திருத்தந்தை, இவர்களின் இத்தகைய சான்று வாழ்வு, அல்ஜீரியாவில் வாழும் கத்தோலிக்கருக்கு நம்பிக்கையின் ஊற்றாகவும், முழு மனித சமுதாயத்திற்கு உரையாடலின் வித்தாகவும் அமைந்துள்ளது என்றும் கூறினார்.

அமல அன்னை மரியாவின் திருநாளான டிசம்பர் 8 இச்சனிக்கிழமையன்று, அல்ஜீரியா நாட்டின் ஓரான் (Oran) நகரிலுள்ள Notre-Dame de Santa Cruz திருத்தலத்தில், புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ பெச்சு அவர்கள், திருப்பலி நிறைவேற்றி, அல்ஜீரியாவில் மறைசாட்சிகளாக உயிர்நீத்த 19 துறவியரை அருளாளர்களாக அறிவித்தார்.

மேலும், இந்நிகழ்வை முன்னிட்டு, அல்ஜீரிய கத்தோலிக்கருக்கு செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 19 மறைசாட்சிகள், அருளாளர்களாக உயர்த்தப்பட்ட நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவிய, அந்நாட்டு அரசுத்தலைவர் Abdelaziz Bouteflika மற்றும் இதில் ஒத்துழைத்த எல்லாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அல்ஜீரியா நாட்டவரான, ஹிப்போ நகர் புனித அகுஸ்தீனார் அந்நாட்டிற்கு வழங்கிய, அன்புச் செய்தியை, அந்நாட்டு கத்தோலிக்க சமுதாயம் தொடர்ந்து அறிவிக்கும் என்ற தனது நம்பிக்கையையும், திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 19 மறைசாட்சிகளும், அல்ஜீரியாவில், உள்நாட்டுச் சண்டை இடம்பெற்ற 1994க்கும், 1996ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொல்லப்பட்டவர்கள். இவர்களில், ஓரான் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றிய Peter Lucian Claverie அவர்கள், தொமினிக்கன் துறவு சபையைச் சேர்ந்தவர். மேலும், ஏழு பேர் சிஸ்டர்சியன் துறவு சபையையும், ஏனையோர், பல்வேறு துறவு சபைகளையும் சேர்ந்தவர்கள். இவர்களில் 15 பேர் பிரான்ஸ், ஒருவர் டுனிசியா, இருவர் இஸ்பெயின், ஒருவர் பெல்ஜியம் ஆகிய நாடுகளையும் சேர்ந்தவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2018, 15:19