திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

மறைப்பணியாளர்களின் உதவியால் வளர்ந்த அமெரிக்க விசுவாசம்

அமெரிக்கக் கண்டத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டதன் 525ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள், இறைப் பிரசன்னத்தின் தொடர் அடையாளமாக இருக்கட்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

1494ம் ஆண்டு, அமெரிக்கக் கண்டத்தின் முதல் திருப்பலி, தொமினிக்கன் குடியரசில் நிறைவேற்றப்பட்டதன் 525ம் ஆண்டு கொண்டாட்டங்கள், வரும் ஜனவரி 5ம் தேதி நிறைவுறவுள்ளதையொட்டி, அமெரிக்க கண்டத்திற்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை ஆறாம் அலக்சாண்டர் அவர்கள் தலைமைப்பொறுப்பில் இருந்தபோது, 1493ம் ஆண்டு, இரண்டாம் முறையாக அமெரிக்கக் கண்டம் நோக்கி தன் பயணத்தைத் துவக்கிய கிறிஸ்தோபர் கொலம்பசின் குழுவில் பல மறைபோதகர்களும் அருள்பணியாளர்களும் இடம்பெற்றிருந்ததைப் பற்றி தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1494 சனவரி மாதம் திருக்காட்சி பெருவிழாவின்போது அமெரிக்கக் கண்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் திருப்பலி, இறைவனின் தொடர்ந்த இருப்பின் அடையாளமாக உள்ளது என்று அதில் கூறியுள்ளார்.

அமெரிக்கக் கண்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் திருப்பலியின் 525ம் ஆண்டு கொண்டாட்டங்கள் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும், அது குறித்து, தான் தனிப்பட்ட முறையில் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதாகவும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

525ம் ஆண்டின் இந்த கொண்டாட்டங்கள், திருஅவையின் தூய இதயத்தையும், அன்பின் சாட்சியத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளதென தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, அருள்பணியாளர்களும் விசுவாசிகளும் கத்தோலிக்க விசுவாசத்தை உறுதியுடன் கடைபிடிப்பவர்களாகவும், நற்செய்தியை புதிய உத்வேகத்துடன் அறிவிப்பவர்களாகவும் செயல்படவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 December 2018, 15:31